மார்ச் 10

“அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்” (சகரியா 8:22).

ஜனங்கள்  கர்த்தரைத் தேட எருசலேமுக்கு வருவார்கள். சேனைகளின் கர்த்தர் இவரல்லவா! வானத்தையும் பூமியையும் சகலத்தையும் உண்டாக்கின சர்வ ஏகாதிபத்தியத்தின் தேவனல்லவா! அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் என்று சொல்லப்படுகிறது. இந்த உலகத்தின் மேன்மை அற்பமானது. கொஞ்சக் காலம் தோன்றி மறைகின்ற புகையைப் போல இருக்கிறது. மனுஷனுடைய நாட்கள் புல்லைப்போலவும் உதிர்ந்துபோகிற பூவைப்போலவும் இருக்கிறது. எவ்வளவு சீக்கிரத்தில் மனிதனுடைய நாட்கள் மறைந்துவிடுகிறது. இதுவே மனிதனுடைய நிலை. ஆனால் கர்த்தரைத் தேடி அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிற ஜனம் ஆசீர்வதிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த தேவன் உன்னதமான கிருபையின் தேவன். இந்த உலகத்தில் நம்மைக் கடைசி மட்டும் காத்து வழிநடத்துகிறவர். தாங்குவேன் சுமப்பேன் தப்புவிப்பேன் என்று வாக்குப்பண்ணின கர்த்தர். மேலும் நித்தியத்திலும் அவரோடு கூட இருக்கும்படியான ஒரு அருமையான காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் செய்கிறார். அதற்கான ஆயத்தங்களை இவ்வாழ்க்கையில் செய்கிறார். தேவ பிள்ளைகளின் ஒரு உன்னதமான சிலாக்கியம் என்னவென்றால், இந்த உலகத்தில் தேவனுடைய பராமரிப்பில் வாழ்வதும் நித்தியத்திலும் அவரோடு என்றென்றைக்கும் வாழுகிற ஆனந்த பாக்கியமுள்ள வாழ்க்கையுமே. இந்த உலக வாழ்க்கை மாயை என்பதை உணராமல் நித்திய மேன்மையை உணர முடியாது. கர்த்தரைத் தேடுகிற இருதயத்தைக் கொண்டிருக்கிறோமா? பாவ மனிதன் தானாகக் கர்த்தரைத் தேட முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.