ஏப்ரல் 30         

“நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோ 3:1).

நீங்கள் கிறிஸ்துவுடன் எழுந்தவர்களா? கிறிஸ்துவுடன் வாழ்கிறவர்களாக  இருக்கிறீர்களா? கிறிஸ்துவை மட்டுமே பற்றிக் கொண்டு வாழ விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் தேவனுடைய உன்னதத்தில் உள்ள காரியங்களைத் தேடுங்கள். அடுத்த வசனத்தில், பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் என்று சொல்லுகிறார். நாம் பூமியில் உள்ளவைகளின் வெறுமையையும், அதனுடைய தாக்கத்தையும் நம்முடைய வாழ்க்கையில் அறிந்திருக்கிறோமா? நாம் கிறிஸ்தவர்கள் எனில், நம்முடைய வாழ்க்கையில் பூமியில் உள்ளவைகள் நமக்கு பெரிதான கவர்ச்சியாக இருக்க முடியாது. இன்றைக்கு அநேர் பூமியில் உள்ளவைகளைத் தேடுகிறார்கள். தங்களுடைய வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல் வாழ்வதற்குரிய வழிகளுக்காக இயேசுவைத் தேடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் தங்களுடைய ஆத்துமாக்களின் உண்மையான இரட்சிப்பையும், மீட்பையும், விடுதலையையும்  பெற்று வாழுகிற வாழ்க்கையைத்  தேடுவதில்லை. நம்முடைய விருப்பங்களும், ஆசைகளும், கிறிஸ்துவுக்குரியதாகவும் அவரை மகிமைப்படுத்துவதற்குரியதாகவும் இருக்கவேண்டும். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எதைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்? மெய்யாலுமே தேவனுடைய ஆவிக்குரிய மேலானவைகளைத்  தேடுகிறீர்களா? அல்லது கீழானவைகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள். கீழானவைகள் சீக்கிரமாக அழிந்துவிடும். ஆனால் மேலானவைகள்  என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். நம்முடைய வாழ்க்கையில் என்றென்றும் நிலைத்திருக்கிற நித்தியமான காரியங்களைத்  தேடக்கடவோம். அதுவே என்றென்றைக்கும் நமக்கு நிலைத்திருக்கும். பொய்யான மாயை பின்பற்றாதிருங்கள். “பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்” (யோனா 2:8),நீங்கள் மெய்யாலும் ரட்சிக்கப்பட்டிருகிறீர்களா?நீங்கள் மரித்தால் பரலோகம் போவீர்கள் என்ற நிச்சயம் உங்களிடத்தில் உண்டா? இல்லையென்றால் இபொழுதே மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியிங்கள்.