“என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று” (சங்கீதம் 27:8).

நாம் சரியான விதத்தில் ஜெபிக்கிறவர்களாக இருப்பது மிக நல்லது. அநேக வேளைகளில் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அறியாமல் ஜெபிக்கிறோம். வேதத்தில் நாம் ஜெபிக்கும்படியான பல வழிமுறைகளை நாம் பார்க்கிறோம். அதின் ஒன்று, ஆண்டவருடைய சத்தியத்தை நினைவுப்படுத்தி, அந்த சத்தியத்தின் அடிப்படையில் ஜெபிப்பது. அவருடைய வார்த்தையைக் கொண்டு நாம் ஜெபிப்பது ஒரு நேர்த்தியான ஜெப வழிமுறையாக இருக்கிறது. சங்கீதக்காரனின் இந்த ஜெபம் நமக்கும் மிக அருமையான பாடத்தை கற்றுக்கொடுக்கக் கூடியதாய் இருக்கிறது. தேவன் ஒருக்காலும் தம்முடைய வார்த்தையை மாற்றுகிறவர் அல்ல. அவர் பொய் சொல்லுகிறவருமல்ல. ஆகவே நாம் தேவனுடைய வார்த்தையைப் படிப்பதும் தியானிப்பதும் நல்லது. அந்த வார்த்தையைக் கொண்டு ஜெபிப்பதும் நன்று. தேவனைக் கிட்டிச் சேருவதற்கு இது மிக நேர்த்தியான முறையாகவும் இருக்கிறது. தேவன் தாமே நம்மை அவ்விதமாக வழிநடத்துவராக.