மார்ச் 12         

“கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்”

ஆமோஸ் 5:4

      நாம் பிழைக்கும் படியான ஒரே வழி தேவனை தேடுவது மாத்திரமே. இன்றைக்கு அநேக மக்கள் தேவனைத் தேடுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதோடு கூட மற்றவற்றையும் தேடுகிறார்கள். “பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்” (ஆமோஸ் 5:5). அநேகருடைய வாழ்க்கையில் தேவனை மாத்திரமே தேட வேண்டும் என்ற உணர்வு இருப்பதில்லை. அவ்விதமான ஒரு எதிர்பார்ப்பும், தேவனைத் தேடுதலும் இல்லாததினால் இரு நினைவுகளால் குந்தி குந்தி நடக்கிறார்கள்.

வேதம் தெளிவாக இரு மனம் உள்ளவன் தன் வழிகளில் எல்லாம் நிலையற்றவன் என்று சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் இருமனம் உள்ளவர்களாக இருப்போமானால் நம்முடைய வாழ்க்கையில் தேவன் செயல்படமாட்டார். தேவனைத் தேடும்பொழுது பிழைப்பீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது”(புலம்பல் 3:25-26) என்று வேதம் சொல்லுகிறது.

      நீங்கள் உங்களுடைய காரியங்களில் நிலையான சிந்தையோடு வாழ்வதே இல்லை. கொஞ்சம் காத்திருந்தாலும் உடனடியாக உங்களுடைய மனதில் அவிசுவாசப்பட்டு கர்த்தருக்கு புறம்பான வழிகளைத் தேடும் படியாக தீவிரிக்கிறீர்கள். அது உங்களுடைய வாழ்க்கையில் நன்மை பயக்காது. நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரை மாத்திரமே தேடுவோம். அப்பொழுது நிச்சயமாக நாம் பிழைப்போம் என்பதில் சந்தேகமில்லை. கர்த்தரை விட்டு மற்றவைகளைத் தேடும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நாம் இருமனமுள்ளவர்களாக வாழுகிறோம். அவைகள் நமக்கு ஆசீர்வாதமாக இருக்காது.