“கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்” (ஏசாயா 34:16).

இங்கு ஆண்டவருடைய வார்த்தையை நாம் கருத்தோடு வாசிப்பதைக் குறித்து சொல்லப்படுகிறது. இன்றைக்கு அநேகர் ஆண்டவருடைய வார்த்தையை வாசிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் கருத்தோடும் ஜாக்கிரதையோடும் வாசிப்பதில்லை. தேவனுடைய வார்த்தை முழுமையானது. மேலும் வேதத்தில் அவருடைய வார்த்தை ஒன்றோடொன்று இணைந்ததாக இருக்கிறது. அதாவது ஆண்டவருடைய வார்த்தையில் ஒரு பகுதியை நாம் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும், அதைக் குறித்து விளக்கப்படுத்தியிருக்கிற காரியம் வேதத்தின் மற்ற பகுதிகளில் காணப்படும். ஆகவே நாம் இந்தப் பகுதிகளை இணைத்து வாசிக்கும்போது நாம் விளங்கிக்கொள்ள அது போதுமானதாய் இருக்கும். அவருடைய வாய் இதை சொல்லிற்று என்று பார்க்கிறோம். தேவனுடைய வார்த்தை இது. கர்த்தருடைய வார்த்தை இது என்று கருத்தாய் ஜாக்கிரதையாய் நாம் வாசிப்பது அவசியம். ஆண்டவருடைய வார்த்தையை நாம் வாசிக்கும்பொழுது, அதை நாம் சரியாய் விளங்கிக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்கு அவசியம். கர்த்தருடைய வார்த்தையைக் கருத்தாய் நாம் வாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்கு இருக்கும். சத்தியத்தை நம்முடைய வாழ்க்கையில் தெளிவாய் அறிந்துக்கொண்டு வாழ நமக்கு அது உதவியாக இருக்கும்.