ஜனவரி 15

“வேதவாக்கியம் சொல்லுகிறபடி” (யோவான் 7:38).

என்ன ஒரு அருமையான இரண்டு வார்த்தைகளை இந்த முழு வேதமுமே பிரதிப்பலிக்கிறதாய் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் மனிதன் சொல்லுகிறபடி என்று சொல்லக்கூடிய பல காரியங்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவைகள் ஒன்றும் நிலைநிற்காது. ஆனால் மாறாத தேவ வார்த்தைகள், வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் ஒருக்காலும் ஒழியாத தேவனுடைய வார்த்தைகள். நம்முடைய முழு விசுவாசமும் இதிலே அடங்கியிருக்க வேண்டும். சொல்லப்போனால் கிறிஸ்தவ வாழ்க்கையின் சாராம்சமும் இதுவே. நான் எந்தளவுக்கு தேவனுடைய வார்த்தையைச் சார்ந்து வாழுகிறேன்? எந்தளவு தேவனுடைய வார்த்தை என் வாழ்க்கையின் நடைமுறையில் உள்ளது? அவை என்னுடைய சிந்தை, விருப்பம், வாஞ்சையை ஆகியவற்றை நடத்துகிறதா? இவைகள் மிக முக்கியமான  காரியம். அநேக வேளைகளில் நாம் நம் சுய விருப்பத்தின் படி, அந்த காரியங்களை செய்யும் வேளைகளில், நாம் இழப்பையும் துன்பத்தையும் அனுபவிக்கிறோம். ஆனால் வேதம் சொல்லுகிறபடி நம்முடைய வாழ்க்கையில் வேதத்தைப் பற்றிக்கொண்டு, இந்த உலகத்தில் அதன் அடிப்படையில் நாம் வாழுகிறவர்களாக  இருக்கும்பொழுது நிச்சயமாகக் கர்த்தரை மகிமைப்படுத்துவோம். தேவனுடைய வார்த்தையைக் கனப்படுத்துகிறவன் தேவனை கனப்படுத்துகிறான். ஆகவே வேத வாக்கியம் இல்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கை இல்லை. வேத வாக்கியமில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையில் வெற்றி இல்லை. மேலும் நம்முடைய அறியாமை நீக்கப்படுவதும் இல்லை. ஆகவே ‘வேதம் சொல்லுகிறபடி’ என்பதே நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான கீதமாக இருக்கட்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொன்றிலும் வேத வாக்கியம் சொல்லுகிறபடியாக இருக்குமானால், நிச்சயமாக நாமும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவோம் என்பதில் சந்தேகமில்லை.