ஜூன் 13           

“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32).

இயேசுகிறிஸ்து சத்தியத்தை அறிவீர்கள் என்று சொல்லுகிறார். சத்தியம் என்றால் என்ன?  பிலாத்துவும் கூட இயேசுகிறிஸ்துவினிடத்தில் சத்தியமாவது என்ன என்று கேட்டதைப் பார்க்கிறோம். முதலாவது நாம் அறிந்து கொள்ள வேண்டியது சத்தியம் என்பது வேதம். வேதம் மட்டுமே சத்தியம். ஆகவே இந்த வேதத்தை நாம் அறிந்து, அதனடிப்படையில் வாழவேண்டும்.  இன்றைக்குக்  கிறிஸ்தவம் என்ற பெயரில் வேதத்தோடு மற்ற காரியங்களைச்  சேர்த்து, அதை ஒட்டுமொத்தமாக சத்தியம் என்று சொல்லி அநேகர் போதிக்கிறார்கள். ஒரு சிலர் தன்னுடைய வாழ்க்கையில் தரிசனங்களைக் கண்டோம் என்று சொல்லி, அதனடிப்படையில் தன்னுடைய வாழ்க்கையில் பல காரியங்களைச் செயல்படுத்துவதை பார்க்கிறோம். அல்லது ஒரு ஊழியக்காரர் என்னை குறித்து இவ்விதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார், அதனால் நான் இவ்விதம் செயல்படுகிறேன் என்று சொல்லுகிற பல ஏமாற்றுக் காரியங்கள் கிருஸ்தவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இன்னுமாக வேதம் சொல்லாத விதங்களில் அவர்களுடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. அற்புதங்கள், அடையாளங்கள் என்று அதையே முக்கியப்படுத்தி  போதிக்கிறார்கள். அற்புத சுகமளிக்கும் கூட்டம், அக்னி அபிஷேகம் என்று பல காரியங்களை தவறான விதத்தில் போதித்து  சத்தியத்தை அவமக்குகிறார்கள். ஆனால் ஆண்டவர் இங்கு  வேதம் மட்டுமே என்று சொல்லுகிறார். இந்த வேதத்தை நாம் முழுமையாய்ச்  சார்ந்து, இந்த வேதம் போதுமானது என்பதை அறிவோமாக.  நம்முடைய தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கைக்கும், சபைகளுக்கும் வேதம் முழுமையானது, போதுமானது. வேதத்தை விட்டு நாம் விலகிப் போகக்கூடிய அபாயம் உண்டு. தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள் என்று மக்கள் வேதத்துக்கு விலகிப் போகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வேதத்தைத்தான் சார்ந்து இருக்கிறோம் என்று சொன்னாலும், முழுமையாக அவர்கள் வேதத்தை சார்ந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. வேதம்  போதுமானது. அதோடு நாம் எதையும் கூட்ட வேண்டிய அவசியமில்லை. கூட்டினால் (வெளி 22:18-19). எதையும் வேதத்தின் அடிபடையில் ஆராய்ந்து பார்ப்பதே சரியானது.