கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் :21                         தீமையினின்று இரட்சிப்பவர்             2 தீமோத்தேயு 4 : 10 – 20

கர்த்தர் எல்லா தீமையின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்

              (2 தீமோத்தேயு. 4 : 18)

பவுலின் இந்த நம்பிக்கை, பவுலுக்கு மாத்திரமல்ல ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இருக்கவேண்டியது. நான் விசுவாசிக்கிற தேவன், எனக்காக  தமது சொந்தக் குமாரனையே பலியாக ஒப்புக்கொடுத்தவர், எல்லா தீமையினின்றும் என்னை இரட்சிப்பார். அது பெரிய தீமையாக இருக்கலாம். அல்லது சிறிய தீமையாக இருக்கலாம் அது மனிதர்களால் ஏற்படும் தீமையாக இருக்கலாம் அல்லது என்னுடைய சொந்த இருதயத்தின் தீமையாகக்கூட இருக்கலாம் அது எந்தத் தீமையாக இருந்தாலும் சரி, அது எவ்வளவு கொடியதாயிருந்தாலும், அவைகள் எல்லாவற்றினின்றும்  என் தேவன் என்னை இரட்சிப்பார். அன்பானவர்களே! உன்னில் இவ்விதமான நம்பிக்கை உண்டா? இது எவ்வளவு உன்னதமான வாக்குத்தத்தம்  பாருங்கள்! தேவாதி தேவன்  ஒருவரால் மாத்திரமே இது கூடும். இந்த வாழ்க்கையை எவ்விதம் வெற்றியோடு கடந்து செல்ல இந்த நம்பிக்கை  நமக்கு உதவும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு கிறிஸ்தவனின் முக்கிய குறிக்கோள் தேவனுடைய பரம ராஜ்யத்தை அடைவதுதான். இதை விட  வேறு என்ன இருக்கமுடியும்? பவுல் அதைத்தான் இங்கு சொல்லுகிறார். தேவன் வாசஞ்செய்யும் மகிமைகரமான  அந்த பரலோக ராஜ்யம் செல்வதே இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்பதை மறந்து விடாதே. இந்த உலகத்தில் ஐசுவரியவானைப்போல எல்லா உலக ஆசீர்வாதங்களையும் அனுபவித்து, நரகம் செல்வதைவிட தரித்திரரான லாசருவைப்போல வறுமையால் வாடினாலும் மோட்சம் செல்லுவதே நமக்கு வேண்டும்.

இந்த மோட்ச ராஜ்யத்தை அடைவதற்குள்ளாக  எத்தனை பாடுகள், வேதனைகள், வருத்தங்கள், சோதனைகள் உண்டு. இவைகளையெல்லாம் நாம் ஜெயித்துச்செல்லமுடியுமா? நம்மால் முடியாது, ஆனால் தேவனால் முடியும். பவுல் அந்த நம்பிக்கையைத்தான் இங்கு வெளிப்படுத்துகிறார். எல்லா தீமையினின்றும் இரட்சித்து கடைசி மட்டும் காப்பாற்றுவார், பாதுகாப்பார் என்று சொல்லப்படுகிறது. ‘அவர் தமது பரிசுத்தவான்களை கைவிடுவதில்லை; அவர்கள் என்றென்றைக்கும் காக்கப்படுவார்கள்.’ (சங்கீதம், 37 : 28)