ஜூலை 30                           

“பெலிஸ்தர் அவனைபிடித்து, அவன்கண்களைப்பிடுங்கி அவனை காசாவுக்குக்கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கலவிலங்கு போட்டுச்சிறைச்சாலையிலே மாவரைத்துக் கொண்டிருக்கவைத்தார்கள்”(நியா 16:21)

     இஸ்ரவேல் மக்களை வழிநடத்திச்செல்ல வேண்டிய மனிதனின் பரிதாபகரமான நிலையைப்பாருங்கள். சிம்சோனின் இரண்டு கண்களும் பிடுங்கிப்போடப்பட்டது. கர்த்தரின் சேனையை தலைமை தாங்கி நடத்திச் செல்வதைவிட்டு தற்பொழுது மாவரைத்துக்கொண்டிருக்கிறான். இவ்வளவு மோசமான நிலைமையை அவன் அடைய காரணமாயிருந்தது என்ன? அவன் கண்களின் இச்சையும் மாம்ச இச்சையும், இவ்விதமான படுகுழிக்குள் அவனை வீழ்த்திற்று. பரிசுத்தமின்மை கீழான பாதாளத்திற்குள் கொண்டு சென்றது. தம் பலத்தை நம்பி பாவத்தைக்குறித்த பயத்தை இழந்தான். பாவத்தைக்குறித்த பயம், எந்த மனிதனில் இல்லையோ அந்த மனிதன் வீழ்ச்சியைதான் சந்திக்கவேண்டும்.

     இன்றைக்கு எவ்வளவோ வரங்கள், தாலந்துகள் பெற்றிருக்கிறோம் என்று மேன்மை பாராட்டுகிறவர்கள் உண்டு. ஆனால் பரிசுத்தத்தைக்குறித்த ஜாக்கிரதை இல்லை. இது மகா ஆபத்தானது. எத்தனையோ  மிகப்பெரிய ஊழியர்கள் என்பவர்கள் சிம்சோனைப்போன்று இந்த பாவத்தில் வீழ்ந்துவிட்டார்கள். உன் சுயபெலத்தால் இதை நீ மேற்கொள்ளமுடியாது. தேவ பெலம்  தேவை. தேவபயம் தேவை. பெண்களோடு சகஜமாய் பழகுகிற ஊழியர்களைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். தேவன் நமக்கு வெற்றிகளைக் கொடுப்பாரானால் பயத்தோடு அந்த வெற்றிக்குக் காரணமான தேவனுக்கு நன்றி செலுத்தி பவுலைப்போல அப்பிரயாஜனமான ஊழியன் நான் என்று சொல்லவேண்டும். தன்னுடைய சாதனைகள் என்று, எந்த ஒரு ஊழியன் பெருமைப்பாராட்டுகிறானோ, அவன் ஏற்கனவே சறுக்குப்பாதையில் பிரயாணத்தை ஆரம்பித்துவிட்டான். நீ ஒவ்வொரு அடியிலும் தேவனைச்  சார்ந்துக்கொள். ‘பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’ என்பது உன்னுடைய அனுதின ஜெபமாயிருக்கட்டும். கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவி நான். அந்தக் கிருபை எனக்கு ஒவ்வொரு நாளும் வேண்டும்  இல்லையேல், எந்த நேரத்திலும் நான் விழுந்துவிடுவேன் என்ற உணர்வோடு ஜீவி.