‘என்னை இரட்சியும் அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்.’ (எரேமியா 17:14)

     இது ஒரு மனிதன் செய்யக்கூடிய பொருத்தமான ஜெபம். ‘ஆண்டவரே, நீர் என்னை இரட்சித்தாலன்றி நான் இரட்சிக்கப்படமுடியாது’. ஒரு மனிதன் தானகவே தன்னை இரட்சித்துக் கொள்ளமுடியாது என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறது. ஏனென்றால் அவனுடைய ஆத்துமா ஏற்கனவே மரித்திருக்கிறது. தேவன் ஆதாமைப் பார்த்து என்ன சொன்னார்? நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம். அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (ஆதி 2 : 17 ). அவ்விதமாகவே ஆத்தும மரணம் ஆதாமுக்கு மாத்திரமல்ல, மனித சந்ததி அனைத்திற்கும் ஏற்பட்டது.

    சாவு என்பது என்ன? ஆத்தும மரணம், அதாவது தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு துண்டிக்கப்படுவது ஆத்மீக மரணம். நித்தியமான காரியங்களைத் தேடக்கூடாதவனாய் அதை உணரக்கூடாதவனாய், உலகத்திற்கும் பாவத்திற்கும் அடிமைப்பட்டவனாய் மனிதன் போய்விட்டான். ‘இப்படியாக, ஒரே மனுஷனாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று’ (ரோமர் 5 : 12 ). ஆகவே ஆவிக்குரிய காரியங்களைத் தேடவோ நாடவோ அவன் முற்றிலும் உணர்வற்றுப்போனான். அவனாகவே தன்னுடைய இழந்துபோன நிலையை உணர்ந்து தேவனிடத்தில் வரகூடாதவனாய் போய்விட்டான். ‘அந்தபடியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, உணர்வுள்ளவன் இல்லை எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்’ (ரோமர்  3 : 10, 12, 23).

      ‘இரட்சிப்பு கர்த்தருடையது’ என்று வேதம் சொல்லுகிறது. ஆத்துமாவில் மரித்துப்போன பாவியை தேவன் தாமே தமது ஆவியானவரைக் கொண்டு உயிர்பித்தார். இதுவே இரட்சிப்பு. ஆகவே இரட்சிப்பின் ஆரம்பம் மனிதனல்ல, தேவன் தாமே ஆரம்பிக்கிறார். ஆரம்பம் மாத்திரமல்ல முடிக்கிறவரும் அவரே. ஆகவே, நீயும் ‘என்னை இரட்சியும் அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்’ என்று ஜெபிப்பதே சரி.