கிருபை சத்திய தின தியானம்

 ஜூலை 20       இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது       லூக்கா19 : 1-10

இயேசு அவனை நோக்கிஇன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாய் இருக்கிறானே‘ (லூக்கா 19 : 9)

சகேயு இவ்விதமாய் மனந்திரும்புவான் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்த ஊரில், சகேயு ஒரு அநியாயகாரனாய் எல்லோராலும் கருதப்பட்டான். அவனுக்கு அவர்கள் இட்ட பெயரென்ன? ‘பாவியான மனுஷன்.’ ஆனால், இந்த மனிதனில் மேலான ஆவிக்குரிய வாஞ்சை காணப்பட்டது. அந்த ஊரில் எத்தனையோ மக்கள் கூட்டமாய் கூடியிருந்தார்கள். இயேசுவுக்கு நெருக்கமாய் நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் யாரையும் இயேசு, பெயர் சொல்லி அழைக்கவில்லை. ஆனால் பாவியாய் என்னப்பட்ட இந்த மனிதனைத்தான் பெயர்சொல்லி அழைத்தார். இதுதான் ஆண்டவருடைய ஆச்சரியமான இரட்சிப்பின் அழைப்பு. உலகம் உண்டாவதற்கு முன்பே தேவன் தம்முடையவர்களை முன்குறித்திருக்கிறார் என்பதை வேதம் தெளிவாய் போதிக்கிறது. மட்டுமல்லாது அவர்களை அவர் அழைக்கிறார். தமது சத்திய ஆவியானவரைக் கொண்டு தேவ வார்த்தையின் மூலமாய் இன்றும் அழைக்கிறார். இந்த அழைப்பை அவர்கள் கேட்கும்பொழுது அவர்கள் அதற்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள். அதற்கு அவர்கள் இணங்கிகொடுக்கும் விதமாக தேவ ஆவியானவர் அவர்களில் செயல்படுகிறார்.

ஆண்டவராகிய இயேசு சகேயுவினிடத்தில் அவன் பாவத்தைக்குறித்து பேசவில்லை. அவன் பாவ வாழ்க்கையை விடவேண்டும் என்றும் சொல்லவில்லை. ‘நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு உன்வீட்டில் தங்கவேண்டும்’ என்றுதான் சொன்னார். ஆனால் அவனாகவே பாவத்தை அறிக்கையிடுகிறான்.அவனாகவே இயேசுவுக்கு பிரியமில்லாதவைகளை நீக்கிபோட முன்வருகிறான். இதுதான் மெய்யாலும் ஒரு மனிதனில் ஆவியானவரின் செயல்பாடு.

இயேசுவுக்கு நெருங்கியிருந்தவர்கள் இரட்சிப்பை பெறவில்லை, ஆனால் தூரமாய்க் காணப்பட்ட சகேயுவோ இரட்சிப்பை பெற்றான். நீங்கள் யாரைப்போல இருக்கிறீர்கள்? சகேயுவை போலவா அல்லது அந்த மக்களை போலவா? சகேயுவை போல இரட்சிக்கப்படுங்கள்.