“அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2 தீமோ 1:9)

     இரட்சிப்பு இலவசமானது, அது நம்முடைய கிரியைகளினால் நாம் சம்பாதிப்பதல்ல. அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்கவில்லை. பின் எதன் அடிப்படையில் நம்மை இரட்சித்தார்? அவருடைய தீர்மானத்தின்படியேதான் நம்மை இரட்சித்தார். அவருடைய  கிருபையின் நிமித்தமே நம்மை இரட்சித்தார். தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்  தக்கதாக  எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நம்மை இரட்சித்தார். உலகமுண்டாவதற்கு முன்பாகவே தேவன் தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை நிர்ணயம் செய்து அதை நிறைவேற்றுகிறார்.  இதைக்குறித்து பவுல் இவ்விதம் எழுதுகிறார். ‘பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு  உண்டாகும்படி, ஏற்ற காலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்’ (தீத்து 1 : 3, 4)

       அவர் உலகத் தோற்றத்திற்கு முன்பே தமது மக்களை முன்குறித்தவராக மாத்திரமல்ல, அவர்களுக்காக தமது ஜீவனையும் கொடுத்து, மரித்து, உயிர்த்தெழுந்து அவர்களை இரட்சித்தார். அவர்கள் பாவங்களை அவர் சுமந்து தீர்த்ததினிமித்தம் அவர்களை நீதிமான்களாக்கினார். தொடர்ந்து முடிவுபரியந்தம் அவர்களை நடத்தி மகிமைப்படுத்துகிறார் என்று ரோமர் 8 : 30ல் பார்க்கிறோம். இந்த அழைப்பில் இரு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று எவர்களை தேவன் முன்குறித்து இரட்சிக்கிறாரோ, அவர்களை தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்காகவே அவ்விதம் செயல்படுகிறார். இரண்டாவதாக இது பரிசுத்த அழைப்பு. தேவன் இரட்சித்தவர்களில் பரிசுத்தம் மிக முக்கியமாகக் காணப்படும், காணப்படவேண்டும். பரிசுத்தமில்லாத இரட்சிப்பை நாம் வேதத்தில் பார்க்கமுடியாது.