மார்ச் 7     

“நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5).

      ஆண்டவர் நம்மைக் கிருபையாய் இரட்சித்திருக்கிறார். ஆண்டவருடைய இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார். மேலும் மறுஜென்ம முழுக்கினால் என்று சொல்லப்படுகிறது, ஞானஸ்தானம் இரட்சிப்பைக் கொடுக்குமா? இல்லை. இங்கு மறுஜென்ம முழுக்கு என்பது தண்ணீரை குறிக்கிறது. தண்ணீர் அவருடைய வார்த்தையைக் குறிப்பதாக இருக்கிறது. ஆகவேதான் யோவான் சுவிசேஷத்தில் ஆண்டவர்: ‘ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால்’ என்று சொல்லுகிறார். ஜலம் தேவனுடைய வார்த்தையை குறிப்பதாக இருக்கிறது. “தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்” (எபேசியர் 5:26) என்று பவுல் சொல்லுகிறார். இந்த இடத்தில் தண்ணீர் முழுக்கு என்பது திருவசனத்தைக் குறிக்கிறது. அவருடைய வசனத்தை நாம் பற்றிக்கொண்டு வாழ்வது அவசியம்.

      பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வசனத்தை கொண்டு நம்மை புதிய மனிதனாக்குகிறார். மறுபடியும் பிறக்கச் செய்கிறார். “தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்” (தீத்து 3:6-7).  கிருபையினால் மாத்திரம் இரட்சிப்பு கிரியையினால் அல்ல. இரட்சிப்பின் மூலமாக நித்திய ஜீவனை நாம் பெற்றுக் கொள்கிறோம். அதற்கு சுதந்திரவாளிகளாக நாம் மாற்றப்படுகிறோம். தேவ ஆவியால் ஏவப்பட்டு தேவ மனிதர்கள் எழுதினது கர்த்தருடைய வசனம். இந்த வசனத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அதைப் பற்றிக் கொள்ளும்பொழுது நிச்சயமாக ஆண்டவர் அந்த வசனத்தைக் கொண்டு நம்மோடு கூட பேசுகிறவராக இருக்கிறார். அது நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.