“நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” (ரோமர் 10:10).
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம் மீட்பு உயிர்த்தெழுதலின் மூலமாக நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். நம்முடைய வாழ்க்கையில் நீதியுள்ள மக்களாக நாம் வாழுகிறோம். அது நம் சுய நீதியல்ல. ஆண்டவருடைய நீதி. இந்த நீதியை விசுவாசத்தினால் பெற்றுக்கொள்கிறோம். கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட செயலைச் சார்ந்து நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். அதை விசுவாசத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்கிறோம். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப்பண்ணப்படும் என்பது என்ன? நம்முடைய வாழ்க்கையில் இவ்விதமாக நீதிமான்களாக்கப்பட்டிருப்பது நம்முடைய வாழ்க்கையின் வழிமுறைகளில் நிரூபிக்கப்படும் என்பதே இதன் அர்த்தம். நம் பேச்சு செயல் இவற்றின் மூலமாக அது நிரூபிக்கப்படும். அதாவது அந்த இரட்சிப்பை நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்தும் விதத்தைக் குறித்துப் பவுல் இங்கு சொல்லுகிறார். ஆண்டவரைக் குறித்துச் சிந்திப்பதும், அவருடைய காரியங்களில் நாம் பணி செய்வதும் அவருக்காக வாழுகிறதையும் குறிக்கிறது. அது வெறுமையான அறிக்கையல்ல, நம்முடைய வாழ்க்கையோடு இணைந்த ஒரு காரியமாகவே அது இருக்கிறது. அநேகருடைய பேச்சு நல்ல ஆவிக்குரியவர்களைப் போலக் காணப்படும் ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் கிறிஸ்தவ குணங்களை வெளிப்படுத்தத் தவறுகிறார்கள். நம்முடைய வாழ்க்கையைக் குறித்து நாம் அதிகமாய் சிந்திப்பது அவசியம். நாம் மெய்யாய் இரட்சிக்கப்பட்டிருப்போம் என்றால் நம் வாயின் வார்த்தைகளில் நாம் சரியாக இருப்போம். அது நம்முடைய இருதயத்தின் நிலையை வெளிப்படுத்துகிறது. ஆகவே நம்முடைய நாவில் கர்த்தரைத் துதிப்பதும் அவரைக் குறித்துப் பேசுவதும் நாம் இரட்சிக்கப்பட்டவர்கள் என்பதை நிரூபிக்கக்கூடிய அருமையான ஒரு காரியமாக இருக்கிறது.