ஜனவரி 5                    கிருபாதாரபலி                 1யோவான் 2:1-6

“நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே” (1யோவான் 2:2).

      இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் நம் பாவங்களை நீக்கக் கிருபையின் பலியாக செலுத்தப்பட்ட தேவன். நாம் அவருடைய பலியை நமக்கென்று கேட்க தகுதியானவர்கள் அல்ல. நாம் தண்டிக்கப்படவே பாத்திரவான்கள். ஆனால் தேவன் தம்முடைய கிருபையை வெளிப்படுத்தும்படியாக நமக்காகப் பலியானார். அவருடைய கிருபை நிமித்தமாகவே நம்மை பாதுகாத்து பராமரித்துப் பலப்படுத்தி வழிநடத்துகிறவராக இருக்கிறார். “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோமர் 3:26). தகுதியில்லாத நமக்கு அளவில்லாமல் கொடுக்கிற அன்பை நாம் எண்ணிப் பார்க்கும்பொழுது அது மிக விலையேறப்பெற்றதாகும்.

      இயேசுகிறிஸ்துவின் கிருபையானது இலவசமானது. ஆனால் அது மிகவும் விலையேறப் பெற்ற ஒன்றாகும். அது மிகப் பெரிய விலைக்கிரயத்தைக் கொடுத்து சம்பாதிக்கபட்டதாகும்.  நாம் அவருடைய கிருபையை சார்ந்து வாழும்பொழுது தொடர்ந்து நம்முடைய பாவங்களில் நாம் உழன்று கொண்டிருக்கமாட்டோம். நாம் பாவத்துக்கு விலகி அவருக்கென்று வாழும்படியான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கை நம்மில் காணப்படும். ஆகவே நாம் கிருபாதார பலியண்டையில் வரும் பொழுது நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அப்பொழுது நாம் அவருக்கென்று நீதியாய் வாழும்படியான வாழ்க்கையைக் கொண்டு இருப்போம். பரிசுத்தத்தில் அனுதினமும் நாம் வளருவோம். ஜீவபலியாக நம்மை அவருக்குக் கொடுத்து தேவனுடைய சாயலில் அனுதினமும் வளருவோம். இப்படியான வாழ்க்கை கர்த்தருக்குப் பிரியமானதாகும்.