நவம்பர் 25       

துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது” (சங் 147:1)

    தேவனை துதித்தல் ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமைகளில் ஒன்று. ஜெபம் எவ்வளவு அவசியமோ, அவ்விதமாகவே துதியும் அவசியமானது. இன்றைக்கு வேதத்தை வாசிக்கிறேன் என்று சொல்லும் அநேக கிறிஸ்தவர்கள் தேவனை துதிக்க வேண்டிய அளவு துதிப்பதில்லை. இது தவறு.

    அதே சமயத்தில் இன்று துதிக்கிறேன் என்று சொல்லி அநேகர் அதை தவறாக செய்கிறார்கள். ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று அநேக முறை சொல்லிகொண்டே இருப்பார்கள். அவர்களின் உதடுகள் அல்லது வாய் அவ்விதம் சொல்லிகொண்டிருக்கும் ஆனால் இருதயமோ வேறு எதையாகிலும் சிந்தித்துக் கொண்டிருக்கும். இது தேவனுக்கு ஏற்கும்படியான துதி அல்ல. அது காலப்போக்கில் ஒரு வேஷமாகவே இருக்குமே ஒழிய தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிற ஸ்தோத்திர பலியாக இருக்காது.

    வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத்தில் தேவ சிங்காசனத்திற்கு முன்பாக நான்கு ஜீவன்களைப் பார்க்கிறோம். அவைகள் தேவனுக்கு மகிமையையும், கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துகின்றன. (வெளி 4 : 9) என்று பார்க்கிறோம். ஆனால் அவைகள் எவ்விதம் சொல்லி ஸ்தோத்திரத்தை செலுத்துகின்றன என்று பாருங்கள். இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன’ (வெளி 4 : 8)

    இதில் நாம் பார்க்கிறதென்ன? விளங்குதலோடும் அர்த்தத்தோடும் துதி ஏறெடுக்கப்படுகிறது. தேவனுடைய சர்வவல்லமை, பரிசுத்தம் ஆகிய தேவனின் பண்புகளை நினைவு கூர்ந்து  ஸ்தோத்திரம் ஏறெடுக்கப்படுகிறது. இதுதான் சரியான துதி செலுத்தும் முறையாகும். தேவனுடைய பண்புகளை வேதத்தில் எந்த அளவு ஒரு மனிதன் அறிந்திருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் அவருக்கு அர்த்தமுள்ள ஸ்தோத்திர பலிகளை ஏறெடுக்கிறவனாய் இருப்பான். ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்.'(சங்கீதம் 50 : 23) அது தேவனுக்கு பிரியமாயிருக்கும், உனக்கோ இன்பமானதாய் இருக்கும்.