கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 10                     ராஜரீக ஆசாரியக்கூட்டம்           1 பேதுரு 2:2 – 12

நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான

ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டவருடைய புண்ணியங்களை

அறிவிக்கும்படிக்கு தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும்,

ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும்,

அவருக்குச்  சொந்தமான  ஜனமாயும்  இருக்கிறீர்கள் (1 பேதுரு 2 : 9 )

    இரட்சிக்கப்பட்ட மக்களின் மேன்மையை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார். தேவனுடைய மக்கள் அந்தகாரத்தினின்று விடுவிக்கப்பட்டு ஆச்சரியமான ஒளிக்குள் தேவனால் கொண்டுவரப்பட்டவர்கள். ஒருகாலத்தில் அவர்களின் செய்கை, பேச்சு அனைத்தும் இருளின் ராஜ்யத்துக்கே ஏற்றதாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஒளியின் பிள்ளைகளாக, ஆச்சரியமான தேவப்பிரகாசத்தில் கொண்டுவரப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தேவனில்லாத இருளில் நம்பிக்கையற்றவர்களாய் வாழ்ந்து வந்தார்கள். பாவம் அவர்களை ஆளுகைச்செய்தது அடிமைப்படுத்தி அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருந்த அவர்கள், இப்போது தெளிவோடு வாழும்படியான வாழ்க்கைக்குள்ளாக கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.  அன்பான சகோதரனே! சகோதரியே! உன்னுடைய வாழ்க்கை இவ்விதமாக இருக்கட்டும்.

     இந்த உலகத்தில் நாம்  பாவ வழியை, அழிவை, நரகத்தைத் தெரிந்துக்கொண்டவர்கள். ஆனால் தேவனோ நம்மை நீதிக்கென்றும், பரிசுத்தத்திற்கென்றும் தெரிந்துகொண்டார். நித்திய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகத் தெரிந்துக்கொண்டார். ’அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும், அறியப்பட்டிருக்கும் .அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தராலே ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துக்கொள்வார்கள்’.

    உன்னத தேவ ராஜ்யத்தின் ஆசாரியராய் தெரிந்துக்கொண்டிருக்கிறார்.. அவருடைய சொந்த ஜனமாய் நம்மைத் தேவன் ஏற்படுத்தியிருக்கிறார். தேவ மக்களுக்கு தேவன் எவ்வளவு மகிமையைக் கொடுத்திருக்கிறார் பாருங்கள்! அவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி நம்மை தெரிந்துக்கொண்டார். உங்களை தேவன் தெரிந்து கொண்டிருக்கிறார் என்ற நிச்சயம் உண்டா?