கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பர் 8               இரட்சிப்பின் வஸ்திரம்           லூக்கா 16:19-31

“ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்;

அவன் இரத்தாம்பாரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து………

லாசரு என்னும் பேர்க்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்;

அவன் பருக்கள் நிறைந்தவனாய்………..

நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று” (லூக்கா 16:19-21)

 

     மனிதன் இரத்தாம்பாரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரிக்க விரும்புகிறான். ஆனால் அது ஒருபோதும் அவனை பரலோகத்திற்கு அழைத்துச் செல்லாது. லாசரு வெளியில் கிழிந்த கந்தை அணிந்தவனாய் இருந்தான். ஐசுவரியவானுடைய உடைக்கும் லாசருவினுடைய உடைக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். புறம்பான அலங்கரிப்பு பிரயோஜனமற்றது. அல்லது புறம்பான பக்தி வேஷம் தரித்திருப்பது உன்னைப் பரலோகம் எடுத்துச்செல்லாது. வெள்ளுடை நீ தரித்திருந்தாலும் பரலோகம் போகமுடியாது. அழியாத அலங்காரமாயிருக்கிற சாந்தமும் அமைதலுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம் உன்னிடத்தில் உண்டா? (1பேதுரு 3:4)

     ஐசுவரியவானிடத்தில் இல்லாத விலையேறப்பெற்ற வஸ்திரத்தை லாசரு பெற்றிருந்தான். அது என்ன வஸ்திரம்? ஆம்! அது இரட்சிப்பின் வஸ்திரம் (ஏசாயா 61:10) உன்னிடத்தில் இந்த வஸ்திரம் உண்டா? தேவன் தம்முடைய மக்களுக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்தி, நீதியின் சால்வையை தரிப்பார் என்று வேதம் சொல்லுகிறது. லாசருவின் பருக்கள் அவன் பரலோகம் போகத் தடையாயிருக்கவில்லை.

     உலக மனிதன் எப்போதும் புறம்பான காரியங்களையே விரும்புகிறவன் அதாவது மற்றவர்கள் பார்வையில் தான் உயர்வாக எண்ணப்பட வேண்டும், உயர்வாய் வாழவேண்டும் என்ற எண்ணங்கள் அவனை வழிநடத்துகிறது. ஆனால் தேவ மனிதன் எப்படி எண்ணுவான்? நான் எப்படி ஆண்டவருக்கு பிரியமாய் ஜீவிப்பேன்? அவருக்காக எப்படி உழைப்பேன்? என் காலங்களையும் நேரங்களையும் தேவனுக்கேன்று எப்படி உபயோகப் படுத்துவேன்? நான் அதிகமாய் ஜெபிக்கவேண்டுமே! ஆத்துமாக்களுக்காக எப்படி உழைப்பேன்? அருமையான நண்பரே, உன்னிடத்தில் அவ்விதமான எண்ணங்கள் உண்டா?