கிருபை சத்திய தின தியானம்

மே 3          எழும்பிப் பிரகாசி      ஏசாயா 60 : 1 -10

எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது’ (ஏசாயா 60 : 1)

            ஒவ்வொரு மெய் கிறிஸ்தவனுக்கும் தேவன் கொடுத்திருக்கும் கட்டளையாகவும் வாக்குத்தத்தமாகவும் இது இருக்கிறது. இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடியிருக்கிறது. ஆனால் அதின் மத்தியில் நீ எழும்பிப் பிரகாசி. ஆண்டவராகிய இயேசு என்ன சொல்லியிருக்கிறார். ‘நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்’ (மத் 5: 14). அன்பான சகோதரனே! மெய்யாலும் நீ அவ்விதம் ஜீவிக்கிறாயா? உன் வாழ்க்கை அவ்விதம் மற்றவர்கள் முன்பாக பிரகாசிக்கிறதா என்பதைக் குறித்துச் சிந்தித்துப்பார். ‘மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.’

            அதுமட்டுமல்ல இந்த இருண்ட உலகில் நாம் நடக்கவேண்டியவர்களாய் இருக்கிறோம். ஒளியில்லாமல் நாம் எப்படி இந்த இருளின் மத்தியில் நடப்பது? இஸ்ரவேலர் வனாந்திரத்தில் நடந்து சென்றார்கள். வனாந்திரத்தின் இருள் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும்! முன்பின் நடந்திராத வழி, விஷ ஜந்துக்கள் நிரம்பியிருக்கும் பகுதிகள் ஆனால் தேவன் அவர்களை எவ்விதம் காத்துக்கொண்டார்.  அவர்கள் இரவும் பகலும் வழி நடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை. (யாத் 13 : 21, 22). கர்த்தர் நமக்கு ஒளியைக் கொடுக்கிறவரானபடியால் நாம் எழும்பி பிரகாசிக்கக் கட்டளையிடுகிறார்.

            இன்றைக்கும் கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் வெளிச்சம் தந்து நம்மை வழிநடத்துகிறார். நம்மையும் பிரகாசிக்கச் செய்கிறார். உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.’ (சங் 119 : 130). நம்மை எந்த அளவுக்குக் கர்த்தர் உயர்த்துகிறார் என்பது நமக்கு ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுக வாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்’ (ஏசாயா 58 : 8 )  நீ எழும்பிப் பிரகாசி.