“நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை” (நீதி 10:30).

        நீதிமான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை. ஏனென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாய் இருக்கிறோம். கிறிஸ்து ஒருக்காலும் அசைக்கப்பட முடியாதவர். இந்த உலகத்தின் மனிதர்கள், அஸ்திபாரம் இல்லாத கட்டிடத்தைக் போன்றவர்கள். அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு மேலோட்டமாக செழிப்பும், மிகவும் பிரமாண்டமாகக் காணப்பட்டாலும் அது இந்த உலகத்தோடு ஒழிந்துபோம். எனவேதான் “சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்” (நீதி 10:25) என்று தேவன் சொல்லுகிறார். ஆனால் நீதிமான் நித்திய அஸ்திபாரம் உள்ளவன். அவன் நித்தியத்திற்காக அஸ்திபாரம் போடப்பட்டவனும், நித்தியத்தில் கிறிஸ்துவோடு வாழும்படியாகவும் தெரிந்துகொள்ளப்பட்டவன். ஆகவே அவன் அசைக்கப்படுவதில்லை. எனவேதான் சங்கீதக்காரன் இவ்விதமாக “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (சங் 16:8) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை எப்பொழுதும் பாதுகாக்கிறவராக இருக்கிறார், ஆகவே அவருடைய மக்கள் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை. மேலும், ” கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்” (சங் 37:28) என்றும் “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” (37:29) என்றும் சங்கீதக்காரன் சொல்லுகிறான். நீதிமான்கள் இந்த உலகத்தில் தங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை சுதந்தரித்துக்கொண்டு என்றைக்கும் அதிலே வாசமாய் இருப்பார்கள் என்பது இதின் அர்த்தம். ஒருவேளை நாம் நீதிமான்கள் அதிக செல்வசெழிப்பாக இந்த உலகத்தில் வாழுவார்கள் என்று நாம் எண்ணிவிடக் கூடாது. அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் ஆவிக்குரிய காரியங்களை இந்த பூமியில் வாழும்பொழுது சுதந்தரித்துக் கொண்டு என்றைக்கும் நித்தியத்தில் தேவனோடு உறவுகொள்ள ஆயத்தப்படுகிறார்கள். ஆகவேதான் மேலும் சங்கீதக்காரன் “நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்” (சங் 112:6) என்று சொல்லுகிறார். நாம் கிறிஸ்துவுக்குள் நீதிமானாக்கப்பட்ட பாவிகளா? இல்லையேல் சிலுவையின் முன் தாழ்த்துவோமாக.