“அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளிப்படுத்தின விசேஷம் 22:11).

தேவன் தம்முடைய கிருபையை இந்த உலகத்தில் இவ்வளவாய் வெளிப்படுத்தியிருக்கிற காலத்திலும் அதைப் புறக்கணித்து, அநியாய வழியில் நடக்கிறவனாய் இருப்பான் என்றால், அவன் இன்னும் அநியாயம் செய்யட்டும். அவன் அசுத்தத்தை விரும்பி நாடுவான் என்றால் அவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். ஆனால் நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும். நாம் நீதியைச் செய்யப் பழகுவோமாக. ஆண்டவருடைய நீதிக்குரியக் காரியங்களை நாம் பற்றிக்கொள்வோமாக. பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்தத்தை நாம் அதிகமாய் நாடுவோம். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லை. 12ஆம் வசனத்தில் ‘இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.’ நாம் எதை விதைக்கின்றோமோ அதை அறுப்போம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு அநேக மக்கள் தாங்கள் செய்கின்ற காரியங்களை தேவன் பார்க்கின்றார் என்ற தேவ பயம் அவர்களில் காணப்படுவதில்லை. ஆனால் வேதம் தெளிவாய் சொல்லுகிறது, அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று. நாம் நன்மைக்கென்று விதைக்கும்பொழுது தேவனுடைய நன்மையான காரியங்களைக் காணுவோம் என்பதில் சந்தேகமில்லை. கர்த்தருக்காக வாழுகிற வாழ்க்கை வீணல்ல. இந்த உலகம் அதை மதிக்கவில்லை என்றாலும் தேவன் அதைக் கனப்படுத்துவார். நம்முடைய வாழ்க்கையில் நீதியையும் பரிசுத்தத்தையும் அதிகமாய்த் தேடுவோமாக. அவைகளின் பலனை தேவன் கொடுக்கச் சித்தமுள்ளவராய் இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.