கிருபை சத்திய தின தியானம்

நவம்பர்  19            பழிவாங்கும் சிந்தை           எபிரேயர் 10:1-30

“பழிவாங்குதல் எனக்குரியது,

நானே பதில் செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எபி 10 : 30)

    இந்த உலகத்தில் மெய் கிறிஸ்தவன் முகாந்திரமில்லாமல் பகைக்கப்படுவான். ஆண்டவராகிய இயேசு அவ்விதமாகவே பகைக்கப்பட்டார். அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும் அதுதான். நமக்கு மாத்திரம் வேறல்ல. பச்சை மரத்துக்கு இவைகளை செய்தால் பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்று இயேசு கேட்டிருக்கிறார். ஆகவே நீ அநேகரால் வெறுக்கப்படலாம். உன்னை ஏமாளி என்று அநேகத் தீமைகளை மனிதர்கள் உனக்குச் செய்யலாம். அவர்கள் அநேகக் காரியங்களில் புத்திசாலிகளாகவும், நீ அப்பாவி போலவும் காணப்படுவாய். ஆனால் ஒன்றை அறிந்துகொள். இவைகளில் ஒரு சிறிய காரியமானாலும் தேவன் அனுமதிக்காமல் உனக்கு நேரிடாது. சாத்தானாக இருந்தாலும், அவனால் ஏவப்பட்ட மனிதர்கள் செய்தாலும் அவைகள் தேவனுடைய திட்டத்தின் படியாகவே உனக்கு அனுமதிக்கப்படுகிறது. தேவனுடைய வார்த்தை மறுபடியும் மறுபடியுமாக சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். ஆனால் கிறிஸ்தவனாகிய நான் இந்த சூழ்நிலையில் எவ்விதம் செயல்படுவது என்பதுதான் கேள்வி.

    ஒரு வேளை மற்றவர்கள், உன்னுடைய சொந்த மக்களே, அநீதியாக தீங்குசெய்யலாம். ஆகவே நான் அதற்கு ஏற்ற பதிலடிகொடுப்பேன் என்று உலக மனிதர்களைப் போல செயல்படுவாயா? அப்படி இருப்பாயானால், இது ஒரு கிறிஸ்தவன் செய்வதற்கு ஏற்றதல்ல. நீ இதற்காக இந்தச் சூழ்நிலையில் ஜெபித்து செயல்படவேண்டும். நிதானமாக செயல்படவேண்டும். நீ திடீரென்று செயல்படுவாயானால், தீமையை இன்னும் அதிகமாகத் தான் செய்வாய். பழிவாங்குதல் ஒரு கிறிஸ்தவனுக்கு உரியதல்ல. பழிவாங்கும் சிந்தை உன்னில் இருக்குமானால் இது கிறிஸ்துவின் சிந்தையாக அல்ல, மாம்ச சிந்தையாகவே இருக்கிறது. பழிவாங்குகிற காரியத்தை தேவனிடத்தில் கொடுத்துவிடு. நான் பதிற்செய்வேன் என்று சொல்லுகிறார். உனக்குத் தீமை செய்கிறவர்களுக்கு ஏற்ற காரியத்தை தேவன் செய்வார். ஆனால் அவர்களுடைய நிலை பயங்கரமானது. ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.