ஏப்ரல் 12    

என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவை காணவொட்டீர்‘ (சங்கீதம் 16 : 10)

ஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை இந்த வசனம் குறிக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் மையமாயிருக்கிறது. ‘கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா’  1 கொரிந்தியர் 15 : 14) என்று பவுல் சொல்லுகிறார். உயிர்த்தெழுதல் என்பது அசாதாரணமான காரியம். எந்த வல்லமையினாலும் எந்த மனிதனாலும், எந்த விஞ்ஞானத்தினாலும்  இது செய்யப்பட முடியாது. மரித்துப் போனது, ஜீவன் பெற்று எழுவது தேவனால் மாத்திரமே செய்ய முடியும். இதே உயிர்தெழுதலின் வல்லமைதான் ஒரு மனிதனின் இரட்சிப்பிலும் செயல்படுகிறது. ‘இயேசு நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்‘ (யோவான் 11 : 25) என்று சொல்லியிருக்கிறார்.

             ஆதாம், ஏவாளை தேவன் உருவாக்கி நீ இந்தக்கனியை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்றார். அப்படியே அவர்கள் அந்தக் கனியை புசித்தப்போது உடனடியாக அதே இடத்தில் விழுந்து செத்துவிட்டார்களா? இல்லை. அப்படியானால் தேவன் சொன்ன சாகவே சாவாய் என்பதின் அர்த்தம் என்ன? ஆம்! அவர்கள் தேவனுக்கு கீழ்படியாமல் போனபோது அவர்கள் ஆத்துமாவில் மரித்துப்போனார்கள். தேவனோடு கொண்டிருக்கும் தொடர்புக்கு மரித்தவர்களானார்கள். தேவனோடு உள்ள உறவு துண்டிக்கப்பட்டது. ஒரு மனிதன் சரீரத்தில் மரிக்கும்போது எவ்வண்ணம் அவன் உலகத்திற்கு மரித்தவனாயிருக்கிறானோ அவ்விதமே அவன் ஆத்துமாவில் நித்திய ராஜ்யத்திற்கும் மரித்துப்போனான். சரீரத்திலும் மரணத்தின் செயல்பாடு  ஆரம்பமாயிற்று. அதுவே சரீர மரணத்தை உண்டாக்குகிறது.

       இவ்விதமாக மரித்துப்போன ஆத்துமாவில் தமது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு தேவன் ஜீவனுக்குள் கொண்டு வருகிறார். ஆகவேதான் தேவனுடைய வார்த்தை அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்(எபேசியர் 2 : 1) என்று சொல்லுகிறது. ஆகவே இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு மனிதனிலும் இந்த ஆவியின் உயிர்த்தெழுதல் தான் மறுபிறப்பு என்றும் அழைக்கப்படுகிறது. உன்னில் இந்த உயிர்த்தெழுதல் நடைபெற்றிருக்கிறதா?