“உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்” (2தீமோத்தேயு 1:14).

நம்முடைய வாழ்க்கையில் ஜெபம் என்பது மிக முக்கியம் என்பதை அறிந்திருக்கிறோம். நம்முடைய ஜெப வாழ்க்கைக்கு பரிசுத்த ஆவியானவர் துணையாக இருக்கிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஜெபம் என்பது தேவனோடு நாம் கொள்ளும் தொடர்பு. ஒரு அர்த்தமுள்ள ஜெப வாழ்க்கைக்கு தேவ ஆவியானவரின் துணை மிக அவசியம். ஒரு விசுவாசிக்குள் பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள் வாசம் பண்ணுகிறவராய் இருக்கிறார். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல என்று வேதம் சொல்லுகிறது. இன்றைக்கும் சிலர் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூருகிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணுகிறபடியால் நம்முடைய எண்ணங்களை அவர் ஆளுகை செய்கிறார். நம்முடைய பேச்சிலும் சிந்தையிலும் அவர் ஆளுகை செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணும்போது நம்முடைய வாழ்க்கையில் விசுவாசத்திற்குரிய சிந்தனைகள் எண்ணங்கள் நம்மில் காணப்படும். பவுல் இங்கு நற்பொருள் என்று சொல்லுவது என்னவென்றால், “நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு” (1தீமோத்தேயு 1:13) தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு அதின் அடிப்படையில் வாழுகின்ற வாழ்க்கை முறையே அந்த நற்பொருளாக பவுல் சொல்லுகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணும்போது இரண்டு அருமையான காரியங்களை நமக்குக் கொடுக்கிறார், ஒன்று தேவனோடு கொண்டிருக்கிற தொடர்பை அவர் நிலைப்படுத்துகிறார். மற்றொன்று அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டு வாழ நமக்கு உதவி செய்கிறார். இதை ஒரு இயற்கை மனிதனால் பின்பற்ற முடியாது. அவர்கள் ஜெபித்தாலும் வேதம் வாசித்தாலும் அதைத் தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவதில் தோல்வியாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணும்பொழுது மாத்திரமே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றியுள்ளவர்களாகவும், தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்துகிறவர்களாகவும் வாழுவோம். நம்முடைய ஆவிக்குரிய, வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் இருக்கும்பொழுது நிச்சயமாக சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் நிறைவோடும் வாழுகிற வாழ்க்கையை வேதம் போதிக்கின்றது.