கிருபை சத்திய தின தியானம்

ஜுலை 24                  தப்புவிக்க வல்லவர்     தானியேல் 3 : 1 – 26

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத்

தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்‘ (தானியேல் 3 : 17)

      சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற இந்த யூத வாலிபர்களின் விசுவாசத்தைப் பாருங்கள். நெபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறுமுழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து அதை எல்லோரும் தாழவிழுந்து பணிந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார். அப்படி பணிந்துகொள்ளாதவர்கள் அந்நேரமே எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவார்கள் என்று கட்டளையிட்டிருந்தான். எரிகிற அக்கினி சூளையை எண்ணிப்பாருங்கள். அது எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! ராஜாவின் கட்டளை ஏற்கனவே சட்டமாக்கப்பட்டபடியால் தங்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் இந்த வாலிபர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்று பாருங்கள். ‘நெபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினி சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்களாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்’. (தானியேல் 3 : 16 – 18)

   தேவன் நாம் எதிர்பார்ப்பதைச் செய்வது மாத்திரமே விசுவாசம் என்று எண்ணக்கூடாது. அது விசுவாசத்திற்குக் காரணரான அவரையே நம்புவதுதான் மெய்யான விசுவாசம். சிலர் சில காரியங்களுக்காக அதிக ஊக்கமாக ஜெபிப்பார்கள். எப்படியும் அதில் விடுதலையைப் பார்க்கவேண்டும் என்று எண்ணுவார்கள். அப்படி அது நடைபெறாவிட்டால் சோர்ந்துபோவார்கள். அன்பானவர்களே! அது உண்மையான விசுவாசம் அல்ல. தேவன் எதைச் செய்தாலும் அதில் தவறில்லை, சரியானது என்று உங்களால் ஏற்று கொள்ளமுடிகிறதா?

     இந்த மூன்று வாலிபர்களை தேவன் விடுவித்தது மாத்திரமல்ல, அதன்மூலம் தம்முடைய மகாபெரிய வல்லமையை விளங்கப்பண்ணினார். உங்கள் வாழ்க்கையிலும் தேவன் செம்மையானதையே செய்வார்.