மே 2   

“அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்” (லூக்கா 15:22).

மனந்திரும்புதலின் மேன்மையை இந்த வசனம் எவ்வளவு அழகாக சித்தரிக்கிறது என்பதைப் பாருங்கள். இங்கு ஆண்டவர் மனந்திரும்புதலை எவ்வளவு உயர்வாகக்  கருதி செயல்படுகிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இந்த இளைய குமாரன் எல்லா சொத்துக்களையும் அழித்து, அவனுடைய வாழ்க்கையில் முற்றிலும் பிரயோஜனமற்றவனாக சகலத்தையும் வீணடித்து, திரும்பி வருகிறான். இந்த வேளையில் உலக மனிதர்கள் அவனை குறித்து பலவிதங்களில் குற்றப்படுத்தி தூஷணமாய் பேசியிருப்பதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் ஆண்டவர் மனம் திரும்புகிறவர்களை அதிகமான அளவு உயர்த்துகிறார். இந்த இடத்தில் இந்த மகனுக்கு உயர்ந்த வஸ்திரமும், மோதிரமும் அணியப்படுகிறது. பரலோகத்திற்கு சென்றிருக்கும் ஒவ்வொரு மனிதனும், அவர்களுடைய வாழ்க்கையில் மனந்திரும்புதல் ஒன்று நிகழ்ந்தது நிமித்தமாகவே, அவர்கள் பரலோகத்தில் சென்றிருக்கிறார்கள்.

“மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 10:10) என்று ஆண்டவர் சொல்லுகிறார். மனந்திரும்புதல் இல்லாமல் பரலோகம் இல்லை. மனந்திரும்பாத வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை. ஆனால் மனந்திரும்புகிற வாழ்க்கையோ பரலோகத்தை நோக்கிப் பிரயாணம் செய்யும்படியான ஒரு வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையில் நாம்பாவி என்று உணர்ந்து  அவருடைய சமூகத்தில் வரும்பொழுது, அவர் நம்மை  மனந்திரும்பாத வாழ்க்கையின் நிலையை விட பலமடங்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை  நமக்குக்  கொடுக்கிறார். இது எவ்வளவு உன்னதமான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை! அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தங்கள் பாவங்களை குறித்து மனவருத்தம் அடைந்து, ஆண்டவருடைய சமூகத்தில் தங்களைத் தாழ்த்தி வராததினால், தேவனுடைய உன்னதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுகொள்ளத்  தவறிவிடுகிறார்கள். மனந்திரும்புதல் ஆசீர்வாதத்தின் வழியாக இருக்கிறது. மனந்திரும்பாமல் பரலோகம் செல்ல முடியாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.