கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 27                  மனந்திரும்பி கர்த்தரில் நிலைத்திரு           ஏசாயா 30:1-15

“நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்;

அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின்

பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;” (ஏசாயா 30:15)

       நெருக்கமான சூழ்நிலையில் நாம் தளர்ந்து போனால் அது நம்முடைய பலவீனமாக மாறிவிடும். ஆனால் நாம் பெலன் பெறும்படியாக பொறுமையோடே அமைதியாக இருப்பது நலமாயிருக்கும். நம்பிக்கையோடு காத்திருப்பது மிக அவசியம். ஏசாயா 26:3-4 ல் “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” என்று சொல்லுகிறார்.

     கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கும் மனதிற்காக ஜெபிப்போம். அவ்விதமாக உறுதியாய் பற்றிக்கொண்ட மனதும் நம்பிக்கையோடே அவருக்காக காத்திருப்பதும் நம்மை சமாதானத்துடன் காத்துக் கொள்ள உதவி செய்யும். இன்னுமாக ஏசாயா 32:17 ல் ” நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தருடைய நீதியைத் தேடுவோம். மனதிரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள். நம் வாழ்க்கையில் தேவனுக்கு முன்பாக செய்த பாவங்களை அறிக்கையிடாமல் இருப்போமானால், அறிக்கையிட்டு மனந்திரும்புவோம். கர்த்தர் மனதிரும்புதலை நம் வாழ்க்கையில் எதிர்பார்க்கிறார். அவ்விதமாக மனதிரும்பினால் மாத்திரமே தேவன் நம்மோடு இருப்பதை உணரமுடியும்.

    நாம் மனந்திரும்பும் பொழுது கர்த்தர் நமக்காக எல்லா காரியங்களையும் பொறுப்பெடுத்து வழிநடத்துகிறவராக இருப்பார். சங்கீதம் 125:1 ல் ” கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்” என்று சங்கீதக்காரன் சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். மனந்திரும்பி கர்த்தரை உன் எல்லா வழியிலும் பற்றிக் கொள். அவர் உன்னை நித்திய இராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்ளுவார்.