“அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது” (சங்கீதம் 54:7).

தாவீது ஒரு விசுவாசத்தோடு கம்பீரமாய் சொல்லக்கூடிய வசனமாக இது இருக்கிறது. ஆனால் எந்தச் சூழ்நிலையில் அவன் சொல்லுகிறான்? தாவீது எங்களிடத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று சீப்பூரார் வந்து சவுலுக்கு இதை சொன்ன பொழுது, இந்தப் பாடலைப் பாடுகிறான். நம்முடைய வாழ்க்கையில் நிச்சயமாக போராட்டங்களை நாம் கடந்து தான் செல்ல வேண்டும். நம் எதிராளி விழிப்போடு இருக்கிறான். அவன் பல விதங்களில் நம்மை சோதிக்கிறான். இங்கு தாவீது “அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்” (சங்கீதம் 54:3) என்று சொல்லுகிறார். இந்த ஒரு சூழ்நிலையில்தான் மீது ஒரு வெற்றியான அறிக்கையை கொடுப்பதைப் பார்க்கிறோம். ஏன் என்று கேட்டால் தாவீது தன் வாழ்க்கையில் தேவன் தன்னுடைய எல்லா நெருக்கத்தையும் விடுவித்து இருக்கிறார் என்பதை அறிந்தவன். ஆகவே இந்த அறிக்கையை செய்கிறான். மேலும் ஐந்தாவது வசனத்தில் “அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.” இக்கட்டான வேளைகளில் நாம் எப்பொழுதும் தேவனுடைய சத்தியத்தை நினைவு கூர்வது நல்லது. அதன் அடிப்படையில் நம்மை விசுவாசத்தில் பெலப்படுத்திக் கொள்ளவும், அதன் அடிப்படையில் நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளவும் அது உதவியாக இருக்கும். அநேக சமயங்களில் சூழ்நிலை மாற்றத்தைப் பார்த்து எதிரிடையான ஒரு எண்ணத்தோடு துவண்டு விடுகிறோம். அருமையானவர்களே! இந்த தேவன் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நீதியை சரி கட்டுவார் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருப்போம். அவருடைய வார்த்தையை படிக்கிறது மாத்திரமல்ல, தேவனுடைய வார்த்தையை விசுவாசத்தோடு நாம் அறிந்து கொள்ளவும், அதன் அடிப்படையில் நம்முடைய சகல காரியங்களையும் செயல்படுத்தவும் தேவன் நமக்கு உதவி செய்வாராக.