கிருபை சத்திய தின தியானம் 

மார்ச் 17                    சீர்கேட்டை நீக்குகிறவர்              ஓசியா 14:1–9

     ‘நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்;

அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்;

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று’ (ஓசியா 14:4).

     கர்த்தர் நம் வாழ்க்கையின் சீர்கேட்டை குணமாக்குவேன் என்று சொல்லுவது, எவ்வளவு ஒரு உன்னதமான சிலாக்கியம்! பொதுவாக மனிதனின் சிந்தைகள்  எப்பொழுதும் சீர்கேடு நிறைந்ததாக இருக்கிறது. அவ்விதமான சிந்தையைக் கர்த்தர் ஒருவரே சரிப்படுத்த முடியும். வீழ்ந்துபோன மனிதனின் வாழ்க்கையில் சீர்கேடான எண்ணங்கள் குணமாகாமல், அவனுடைய வாழ்க்கையில் கர்த்தர் ஒருபோதும் வாசம் பண்ணமாட்டார். சீர்கேடான மனிதன் தேவனோடு சரியான உறவைக் கொண்டிருக்கமுடியாது. அதுமாத்திரமல்ல, ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் குணமானவர்களாக இல்லையென்றால், தேவனுடைய கோபம் நம்மேல் பற்றியெரியும் என்பதையும் மறந்துவிடக்கூடாது. 

  ‘கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி’ (எரேமியா 17:14) என்று வேதம் சொல்லுகிறது. என்ன ஒரு அருமையான ஜெபம் இது! நம் வாழ்க்கையில் நாம் சீர்கேட்டிலிருந்து குணப்படுவதை விரும்புகிறோமா? அப்படியானால் இவ்விதமான ஜெபத்தைக் கர்த்தரிடத்தில் ஏறெடுக்கும்பொழுது கர்த்தர் நம்மை நிச்சயமாக குணமாக்குவார். ஆகவேதான் கர்த்தர்: ‘நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்’ (எரேமியா 33:6) என்று சொல்லுகிறார். 

    நம்முடைய வாழ்க்கையில் தேவன் நமக்கு பரிபூரண சமாதானத்தை வைத்திருக்கும்பொழுது, நாம் ஏன் இன்னுமாக சமாதானமற்றவர்களாக வாழவேண்டும்? தேவன் உண்மையுள்ளவர். அவரை நோக்கி நம்முடைய சீர்கேட்டை அறிக்கையிடும் பொழுது,கர்த்தர் நம் வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர் ஒருவரே நமக்கு மெய்யான விடுதலையைக் கொடுக்கிறவர். பரிசுத்தமான வாழ்க்கைக்காக தேவனை நோக்கி மன்றாடுவோம். இன்னுமாக ஏன் நீ பாவத்தின் சிறையில் சிக்கித் தவிக்க வேண்டும்? சிலுவையை நோக்கிப்பார்.