கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 8                 அதிசயங்களை நினைவுக்கூறுங்கள்                          சங் 105 ; 1 – 12

‘அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள்’ (சங்கீதம் 105 : 6)

            ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் தேவனுடைய வெளிச்சத்தில் ஆராய வேண்டும். தேவனுடைய பரிசுத்தவான்கள் அவ்விதம் ஆவிக்குரிய பழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். சங்கீதக்காரன், ‘கர்த்தருடைய செய்கைகளை நினைவுகூறுவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூறுவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்’ (சங் 77 : 11, 12). என்றான். உன்னுடைய வாழ்க்கையில் தேவன் செயல்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் யோசித்துப்பார்ப்பாயானால் உன் வாழ்வில் தேவன் எத்தனை அதிசயங்களைச் செய்திருக்கிறார் என்பதை நீ அறிந்து கொள்ளமுடியும். நீ உன்னுடைய இக்கட்டு வேளைகளில் ஜெபித்தபொழுது தேவன் எவ்விதம் ஆச்சரியமான பதில்களைக் கொடுத்திருக்கிறார் என்பதை நீ கண்டுக்கொள்ளமுடியும். மற்ற எல்லோரைக் காட்டிலும் உன்னுடைய வாழ்க்கையிலே தேவன் எவ்வளவு அற்புதமாகச்செயல்பட்டிருக்கிறார் என்பதை நீ சாட்சிபகர முடியும்.

            மேலும், சங்கீதக்காரன் அவருடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளை நினைவுகூறுங்கள்’ என்று சொல்லுகிறார். ஆம்! தேவன் தம்முடைய மக்களை தம்முடைய வார்த்தையைக் கொண்டு வழி நடத்துகிறார். அவருடைய பிள்ளைகள் வழி தவறும்போது அவருடைய வசனத்தை அனுப்புகிறார். அவருடைய தாசர்கள் மூலம், ஆலயத்தில் செய்திகளை கேட்பதின் மூலம், வேத வசனத்தைச் சுட்டிக்காட்டுகிறார். வழிவிலகும் போது எச்சரிக்கிறார். ஆவியில் சோர்ந்துபோகும்போது உற்சாகப்படுத்துகிறார். சில சமயங்களில் தொடர்ந்து மனந்திரும்பாமல் போகும்போது சிட்சைகளை அனுப்பி அவர் பக்கமாக திருப்புகிறார். அன்பானவர்களே! அவர் செயல்பாடு ஆச்சரியமானது! அதை நினைவுகூறுங்கள். தியானியுங்கள், சிந்தியுங்கள். தேவன் உங்கள் வாழ்க்கையிலும் செய்திருக்கிற எண்ணற்ற அதிசயங்களைக் காண்பீர்கள். அது உங்களை பெலப்படுத்தும்.