“உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:18).

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நம் எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனைச் சார்ந்து வாழ வேண்டும். உயர்வானாலும் தாழ்வானாலும் எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரை நாம் சார்ந்துகொள்ளுவோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் சம்பாதிப்போமானால் அதற்குரிய பெலனைக் கொடுக்கிறவர் கர்த்தர். ஆகவே நாம் சம்பாதித்தவைகளை முக்கியப்படுத்தி அவைகளைச் சார்ந்து அல்ல, அதைச் சம்பாதிக்க பெலனைக் கொடுத்த தேவனை நாம் மறந்துவிடக் கூடாது. அநேகர் சம்பாதிக்கும்போது அது தங்களுடையது என்று பெருமைபாராட்டுகிறதற்கான வாய்ப்புண்டு. ஆனால் நாம் சம்பாதிப்பதற்கு பெலனைக் கொடுத்தவர் தேவன். அந்த பெலன் இல்லாமல் நாம் சம்பாதிக்க முடியாது என்ற எண்ணத்தோடும் சிந்தையோடும் கர்த்தரை சார்ந்துகொள்ளுவது சிறந்தது. தாழ்மையான வழியே நமக்குப் பாதுகாப்பான வழி. தாழ்மையின் சிந்தையில் கர்த்தரைப் பின்பற்றுவதே மெய்யான சத்தியத்தின் வழி. அதற்குப் புறம்பான எல்லாம் அழிவுக்கு ஏதுவாகவே இருக்கின்றது. பெருமை நம்மை அழித்துவிடும். தாழ்மை நம்மை உயர்த்தும். நம்முடைய வழிகளில் எல்லாம் அவரை நினைத்துக்கொள்வோம். அப்பொழுது அவர் நம்மைப் பாதுகாத்து வழிநடத்துவார்.