நவம்பர் 16  

      “மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை;” (2இராஜா 14:4)

      இது யாரைக் குறித்து சொல்லப்படுகிறது? யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவைக் குறித்து சொல்லப்படுகிறது. அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. உன்னுடைய வாழ்க்கையில் அநேக காரியங்களை வெறுத்து அகற்றிவிட்டாய். ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தடையாக இருந்த பல காரியங்களை நீ அகற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். ஆனால் நீ இன்னும் மேடையில் பலியிட்டு வருகிறாய் (2 இராஜா 14:4).

      நம் வாழ்க்கையில் நாம் கர்த்தருக்குள் வரும்பொழுது கர்த்தருக்கு பிரியமில்லாத சகலத்தையும் வேரோடு அழித்துவிடுவது அதிமுக்கியமான ஒன்று. ஏனென்று கேட்டால் அகற்றப்படாத பாவங்கள் எப்பொழுதும் ஆபத்தானது. அகற்றப்படாத பாவங்கள் நமக்கும் தேவனுக்குமிடையே எப்பொழுதும் பிளவை உண்டுபண்ணுகிறதாக இருக்கும். நம் வாழ்க்கையில் அகற்றப்படாத பாவங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவை. அன்பானவர்களே! உங்களுடைய வாழ்க்கையில் அகற்றப்படாத மாம்சத்திற்குரிய பாவ எச்சங்கள், ஜென்ம சுபாவங்கள் இருக்குமானால் அவைகளை நீ அகற்றிவிடு. கர்த்தர் அகற்றப்படாத மேடையை விரும்புவதில்லை. உன் பாவத்தை முழுமையாக வெறுத்து, கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி ஒப்புக்கொடு. கர்த்தர் உன்னில் வாசம் பண்ணுவார்.