கிருபை சத்திய தினதியானம்

  பிப்ரவரி 26                  சிறையிருப்பைத் திருப்புகிறவர்                 ஆமோஸ் 9:11-15

“என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்;

அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து,

திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து,

தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்” (ஆமோஸ் 9:14)

       கர்த்தர் நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து முதலாவது நம்மை திருப்புகிறவராக இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையானது கர்த்தருக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கப்பட்டு, அவருடைய இரட்சிப்பை சுதந்தரித்துக் கொண்டதாக இருப்பது மிக உன்னதமானது. மேலும் அவர் நம்மை பாழான நகரங்களைக் கட்டி, ஒன்றுமில்லாமல் போன நம் வாழ்க்கையை புதுபித்தவராக இருக்கிறார். “சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்” (சங் 53:6) என்று சங்கீதக்காரன் சொல்லுவதைப் பார்க்கிறோம்.
      நம்முடைய வாழ்க்கையில் நம் சிறையிருப்பை தேவன் திருப்பும்பொழுது, அவர் கொடுக்கிற மகிழ்ச்சி மிக உன்னதமானது. இன்னுமாக “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே 30:3) என்று வேதம் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். தேவன் நம் வாழ்க்கையின் சிறையிருப்பை திருப்பினவர் மட்டுமல்ல, அநேக நன்மைகளைக் கொடுத்தவராக இருக்கிறார்.
     நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை கனி கொடுக்கிற வாழ்க்கையாக மாத்திரமல்ல, நம்முடைய வாழ்க்கையின் மூலமாக அநேகர் கனிகளைப் புசித்து பயன்பெறும்படியான ஆசீர்வாதமான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். இதுவே மெய்யான இரட்சிக்கப்பட்ட வாழ்க்கையின் அடையாளங்கள். நாம் இவ்விதமான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறோமா? அப்படி இல்லையென்றால் நாம் இன்னும் சிறையில் இருக்கிறோம்.