ஜூன் 7   

“அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” (ஆபகூக் 3:17-19).

என்ன ஒரு அருமையான விசுவாசம் இது! இந்த அறிக்கையை நாம் பார்க்கும் பொழுது நம்மைக் குறித்து நாம் வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ஆபகூக் வாழ்க்கையில் சோர்ந்து போகக்கூடிய பல காரியங்களை அவர் பட்டியலிட்டு பேசுகிறார். ஒன்று இரண்டு அல்ல பல காரியங்கள். இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன், இரட்சிப்பின் தேவனுக்குள் நான் களி கூறுவேன் என்று சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய விசுவாசம் எவ்விதமானது என்பதை நம்முடைய வாழ்க்கையின் இக்கட்டான வேளைகளில்தான் நாம் சரியாய் புரிந்துகொள்ள முடியும். நம்முடைய வாழ்க்கையில் சகலமும் நன்றாக இருக்கும்பொழுது அதை நாம் விளங்கிக் கொள்வதில்லை.

தேவனும்  நம்முடைய வாழ்க்கையில் அநேக வேளைகளில் நம்முடைய விசுவாசம் எவ்தமானது என்பதை விளங்கிக்கொள்ள பல சோதனைகளை நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிறார். அவருடைய விசுவாச அறிக்கையை பாருங்கள். ஆண்டவராகிய கர்த்தர்  என்  என் கால்களை மான் கால்களைப் போலாக்கி உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்க பண்ணுவார். விசுவாசம் என்பது நம்முடைய வாழ்க்கையில் தத்தித் தத்தி நடப்பதல்ல. மான்கள் எவ்வளவு வேகமாக ஓடும் என்பதை நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது, அதிவேக விரைவாக ஓடும் என்பதை அறிந்திருக்கிறோம். விசுவாசம் என்பது ஒரு ஓட்டம். அதில் நாம் ஓடிக்கொண்டே இருப்போமானால், தேவன் ஓட்டத்தின் முடிவில் நமக்கு ஜெயத்தை கொடுப்பவராக இருப்பார். மேலும் அவர் உயரமான தலங்களில் நம்மை நடத்துவார். வாழ்க்கையின் சோதனைகளுக்கு மேற்பட்ட நிலையில் வெற்றியுடன் வாழ்பவர்களாக நாம் காணப்படுவோம்.