ஜூன் 17       

“கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (பிலி 4:4).

      பவுல் பிலிப்பு சபைக்கு எவ்வளவு ஒரு நல்ல ஆலோசனையைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் பாருங்கள். மனிதனுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் துக்கமும், துயரமும், மனக்கவலைகள், மனக் கஷ்டங்கள் என்று அநேகம் இருக்கின்றன. சொல்லப்போனால் வாழ்க்கையில் பெரும் பகுதி இவ்விதமான காரியங்களால் தான் நிறைந்திருக்கிறது. ஆனால் பவுல் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லுகிறார். நாம் எப்படி எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கமுடியும்? இந்த உலகத்தில் எதுவுமே நிலையான சந்தோஷத்தைக் கொடுப்பதில்லையே.

      இங்கு பவுல்  கர்த்தர் கொடுக்கிற சந்தோஷத்தைக் குறித்துப் பேசுகிறார். ஆகவேதான் மறுபடியுமாக சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லுகிறார். கர்த்தர் ஒரு மனிதனுக்கு கொடுக்கிற சந்தோஷமே நிலையான சந்தோஷம். “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்;” (1 தெச 5:16-18) என்று பவுல் சொல்லுகிறார். எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்யுங்கள் என்கிறார், ஏனென்றால் தேவன் நமக்கு அனுமதிக்கிற அனைத்துமே நன்மைக்கு ஏதுவானவைகள். இதை ஒவ்வொரு விசுவாசியும் அறிந்து நிச்சயப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

      “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” (1 பேதுரு 4:13) என்று பேதுருவும் சொல்லுகிறார். பாடுகளுக்கு நாம் பங்காளிகளாக இருந்தால், சந்தோஷப்பட முடியுமா? அன்பானவர்களே! பாடுகளில் மெய்யான சந்தோஷத்தை பெறமுடியும். இது கிறிஸ்து நமக்கு கொடுக்கிற சந்தோஷம். அது எல்லா சூழ்நிலையிலும் மெய்யான சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆகவேதான் இயேசுகிறிஸ்து: “சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” (மத் 5:12) என்று சொல்லுகிறார். உன்னில் இந்த சந்தோஷம் காணப்படுகிறதா?