இது பொதுவான மக்களின் அறிக்கை அல்ல. நாமும்கூட உபத்திரவங்களை விரும்புகிறவர்கள் அல்ல. ஒருவேளை பவுல் சொல்லும்படியான இந்தக் கூற்று சரியானதாக இருக்க முடியுமா? என்று நாம் எண்ணலாம். ஆனால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்ப்போமானால், உபத்திரவமில்லாத காலங்களில் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சி என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும். அல்லது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனோடு கூட தொடர்பு கொண்டு, அவரை மாத்திரமே சார்ந்து வாழ்கிற வாழ்க்கையில் நாம் குறைவுள்ளவர்களாக இருக்கலாம். அநேக சமயங்களில் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனை சார்ந்து கொள்ளாமல் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணம், நல்ல ஆரோக்கியத்தை நாம் சார்ந்து வாழ்கிற வாழ்க்கையைக் கொண்டிருக்கிறோம். ஆனால் உபத்திரவங்களின் வேளைகளில் நாம் ஆண்டவரை சார்ந்துகொள்ள ஏவப்படுகிறோம். உபத்திரவம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக நல்லது. உண்மைதான் நாம் அதைக் கடந்து போகிற வேளையில் அது நமக்கு கடினமானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த உபத்திரவம் ஒன்றே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை உருவாக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த உபத்திரவத்தின் மூலமாகவே நாம் ஆண்டவருடைய கிருபையை அதிகமாய் உணர்ந்து கொள்ளக் கூடும்.

பவுல் ஒரு நல்ல ஆவிக்குரிய முதிர்ச்சியான நிலையில் ‘உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்’ என்று சொல்லுவது நியாயமானதாகவே இருக்கிறது. அது மெய்யாலும் அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முதிர்ச்சியான தன்மையைக் காட்டுவதாக இருக்கிறது. உபத்திரவத்தில் தேவனுடைய கிருபையை நமக்கு தருவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். ஒரு ஆவிக்குரிய மனிதன் உபத்திரவத்தில் பொறுமையைக் கற்றுக்கொள்கிறான். ஆகவேதான் பவுல் “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்” (ரோமர் 5:3-4) என்று சொல்லுகிறார். உபத்திரவம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக நல்லது. அது மிக அவசியமானது. உபத்திரவம் இல்லாமல் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளரவோ மேலே எழும்பவோ முடியாது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்