அக்டோபர் 5

“கர்த்தர் சியோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.” (யோவேல். 3:16).

தேவன், தேவனை அறியாத உலகத்து மக்களுக்கும், தன்னுடைய மக்களுக்கும் எவ்விதம் இருப்பார் என்று இங்கு சொல்லப்படுகிறது. உலக மக்களுக்கு கெர்ச்சிக்கிறவராயிருப்பார். தேவனுடைய கோபம் அவர்கள் மேல் தங்கும். தேவனுடைய ஆக்கினைக்கும் தண்டனைக்கும் உரியவர்களாய் அவர்கள் இருப்பார்கள். சிங்கத்தின் கெர்ச்சிப்பு எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தேவனுடைய கோபாக்கினை அவர்கள் மேல் தங்கும் பரிசுத்த கோபத்தால் உண்டாகும் ஆக்கினை இது.

“ஆனாலும்” என்ற சிறிய வார்த்தையில் எவ்வளவு ஆழமான பொருள் அடங்கியிருக்கிறது! உண்மைதான், இந்த பயங்கரம், தேவனை மெய்யாலும் அண்டிக் கொள்ளாதவர்களுக்குதான். நீ தேவனுடைய பிள்ளையாயிருப்பாயானால், அஞ்ச வேண்டியதில்லை, கலங்கவேண்டிய அவசியமில்லை. “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்.” (சங்கீதம். 9:9) உன் சிறுமையின் நாட்களில் நீ தேவனிடத்தில் செல். அவர் உனக்கு அடைக்கலமாயிருப்பார். நீ மற்றவர்கள் பார்வையில் சிறுமையாய் காணப்படும் போது, நீ கர்த்தரிடத்தில் செல்லுவாயானால் அவர் மெய்யான அடைக்கலமாயிருப்பார். “எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்கு………….உயர்ந்த அடைக்கலமானீர்” (சங் 59 :16) உன்னுடைய நாட்கள் நெருக்கத்தின் நாட்களாக இருக்கலாம். பவுல் சொல்வது போல எப்பக்கத்திலும் நெருக்கப்படலாம். ஆனால் தேவன் இவ்விதமான வேளைகளில் அடைக்கலமாயிருப்பார்.

அற்பமாய் காணப்படும்போதும், பியோஜனமற்றவன், பியோஜனமற்றவள் என்று சொல்லப்படும் போதும் அவர் தம்முடைய மக்களுக்கு அரனான கோட்டையுமாயிருப்பார். பெலத்த பாதுகாப்பாயிருப்பார். அவருடைய பாதுகாப்பில் நீ சுகமாய் வாழ்ந்து சுகித்திருப்பாய்.