“கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்” (ஆமோஸ் 1:2).

      இந்த இடத்தில் தேவனை அறியாத ஜனங்களுக்கும் கர்த்தர் இவ்விதமாக தன்னை வெளிப்படுத்துகிறார். அவர் கர்ஜிக்கிற சிங்கமாக தேவனை அறியாத ஜனங்கள் மேல் தம்  கோபத்தை வெளிப்படுத்துகிறவராக உள்ளார். அவ்வேளையில் வானமும் பூமியும் அதிரும். அவருடைய கோபத்திற்கு முன்பாக நிற்கக்கூடியது ஒன்றுமில்லை. அவருடைய கோபாக்கினையை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த உலகத்தில் ஒரு பாவி தேவனுடைய கோபம் உடையவன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் கர்த்தர் தமது ஜனத்திற்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாக இருக்கிறார். தேவன் தம்முடைய ஜனகளிடத்தில் செயல்படும் படியான காரியம் எவ்வளவு வித்தியாசமானது என்று பாருங்கள். அவர் தம்முடைய ஜனங்களுக்கு அடைக்கலத்தை கொடுத்திருக்கிறார். ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த உலகத்தில் தேவன் அடைக்கலமும் கோட்டையுமாக இருப்பாரானால், அவனுக்கு எதிராக நிற்கக்கூடிய காரியம் என்னவாக இருக்க முடியும்?  “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்” (சங்கீதம் 18:2). எத்தனை காரியங்களை அவர் அடுக்கிக்கொண்டே போகிறார். நம்முடைய இரட்சகர் நம்மைப் பாதுகாப்பது எவ்வளவு உன்னமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். மேலும்  “நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்” (சங்கீதம் 61:3). இன்னுமாக, “அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை” (சங்கீதம் 62:2) என்று சங்கீதக்காரன் தன் சங்கீதங்களைப் பாடிக்கொண்டே போகிறான். தேவனை சார்ந்து கொள்வோம், அவர் நமக்கு பாதுகாப்பைக் கொடுத்து வழி நடத்துவார்.