ஆகஸ்ட் 21   அடைக்கலமாயிருக்கிறார்   சங்க்  62:1 – 8

“ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைகலமாயிருக்கிறார்.” (சங் 62:8)

உங்களுடைய நிலைமைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், எல்லா வேளைகளிலும் கர்த்தரை நம்புங்கள். சோதனை உபத்திர வேளைகளில் தேவனுடைய சித்தமில்லாமல் இது எனக்கு அனுமதிக்கப்படவில்லை  என்பதைக் குறித்து உறுதியாய் நம்புங்கள். தேவனுடைய பிள்ளைகளுக்கு, சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் என்பதைக் குறித்து எள்ளளவும் சந்தேகம் கொள்ளாதீர்கள். உங்கள் குறைவுகளையெல்லாம் தேவன் நிறைவாக்குவார் என்று விசுவாசியுங்கள். உங்கள் வாழ்நாட்கள் அனைத்திலும் அவ்விதம் நம்புங்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும், அவ்விதம் நம்புங்கள்.

அப்படி நம்பி, உங்கள் இருதயத்தை தேவனுடைய சமூகத்தில் ஊற்றிவிடுங்கள். அன்னாள் தேவனுடைய சமூகத்தில் தன் இருதயத்தை ஊற்றிவிட்டாள். அவளுடைய இருதயத்தில் எத்தனை பாரங்கள்! இந்த உலகத்தில் வேறு எந்த மனிதனாலும்  உதவி செய்யக்கூடாத நிலை.  எந்த மனிதனிடத்தில் சொல்வதும் ஒரு தீர்வையும் கொண்டுவரமுடியாது. ஆனால் இந்த நேரத்தில் அன்னாள் சரியானதைச் செய்தாள். மனிதனால் கூடாது, ஆனால்  தேவனால் கூடும்  என்பதை   அவள் அறிந்திருந்தாள். அவளுடைய வாழ்க்கையில் ஏமாந்துப்போக கர்த்தர் விடவில்லை.

இருதயத்தை கர்த்தருடைய சமூகத்தில் ஊற்றிவிடுவது தன்னையே தேவனுக்கு அர்பணிக்கிறதாய் இருக்கிறது. தன் முடியாமையை ஒத்துக்கொண்டு, தேவனே! நீர் இடைபடாவிட்டால் நான் ஒன்றும் செய்யமுடியாது என்பதாயிருக்கிறது. அது உதட்டிலிருந்து வரும் ஜெபம் அல்ல. அது உள்ளத்திலிருந்து வரும் ஜெபம். “தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.” அதில் தஞ்சம் புகுவதுதான் ஞானமான காரியம். ஏனென்றால் அவர் அடைக்கலம் கொடுக்கிறவராயிருக்கிறார். மனிதர்கள் துரத்திவிடுவார்கள், உன்னைக் கண்டு விலகிப்போவார்கள் ஆனால் தேவன் அப்படிபட்டவரல்ல. அவரே மெய்யான அடைக்கலம், அடைக்கலம் கொடுக்கிறவராயும் இருக்கிறார்.