“நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களைப் பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாதவழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள்” (எரேமியா 35:15).
தேவனுடைய மக்களாகிய இஸ்ரவேலர் தங்களுடைய வாழ்க்கையில் தேவனை விட்டு விலகி அந்நிய தேவர்களைச் சேவிக்கிறதைக் குறித்து எச்சரித்து எரேமியா இவ்வாறு சொல்லுகிறார். ஒருவேளை நாம் நம்முடைய வாழ்க்கையில் இஸ்ரவேல் மக்களைப் போல அந்நிய தேவர்களைச் சேவிப்பதில்லை என்று எண்ணலாம். ஆனால் தேவனுக்குப் புறம்பானது விருப்பமற்றது எல்லாமே அவருக்கு அந்நிய காரியங்களே. அவைகளை நாம் நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றி நடக்கும்பொழுது, அந்நிய தேவர்களைப் பின்பற்றின இஸ்ரவேல் மக்களைப் போலவே நாம் காணப்படுகிறோம். மேலும் தேவன் நம்மைப் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்ப வேண்டும் என்றும் சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவனைத் துக்கப்படுத்துகிற காரியங்கள் உண்டா என்று நம்மை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. அவைகளை விட்டுத் திரும்பி உங்கள் நடக்கையை சீர்திருத்துங்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார். தேவன் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புவது தவறல்ல. ஆனால் எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையைச் சீர்திருத்திப் பொல்லாத வழியை விட்டு, அந்நிய காரியங்களை விலக்கிக் கர்த்தர் பக்கம் திரும்புவதை அவர் எதிர்பார்க்கிறார். அப்பொழுது தேவன் நிச்சயமாக நம்மை ஆசீர்வதிப்பார். அது நம் ஆத்துமாவுக்கு நன்மையானது. தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை விட்டு நாம் விலகுவோம். அப்படிப்பட்ட காரியங்களை நாம் வாஞ்சிப்பதினால் நமக்கு என்ன பிரயோஜனம்? ஆனால் நம்முடைய காரியத்தை சீர்ப்படுத்தி தேவனில் பிரியமுள்ளவர்களாய்க் காணப்படவும் தேவன் நம்முடைய வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும் நாம் தேவனுக்கு ஒப்புக்கொடுப்போமாக.