கிருபை சத்திய தின தியானம்

 நவம்பர் 11                   தெரிந்து கொள்ளுதல்             ரோமர் 8:19-30

“தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது

குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முங்குறித்திருக்கிறார்” (ரோமர் 8:29)

     அநேகர் தேவனுடைய தெரிந்துக்கொள்ளுதலை, முன்குறித்தலை தவறாக விளங்கிக்கொண்டுள்ளார்கள். தேவன் என்னை முங்குறித்திருப்பாரானால் கடைசியில் பரலோகத்தில் சேர்த்து விடுவார் என்று எண்ணுகிறவர்களும் , சொல்லுகிறவர்களும் உண்டு. ஆனால் இது சத்தியத்திற்கு முரன்பாடானது என்று அவர்கள் அறிவதில்லை. தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்கள் இயேசுவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். தேவன் அவர்களை அழைக்கிறவராக மாத்திரமல்ல, ஒவ்வொரு நாளும் தேவ ஆவியானவர் மூலம் அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றிக்கொண்டே வருகிறார். அநேக சமயங்களில் அவர்கள் வாழ்க்கையில் பாடுகள், துன்பங்கள், வியாதிகளை அனுமதித்து அவர்களை புடமிடுகிறார், சுத்தப்படுத்துகிறார்.  அவர்களை தேவனின் பரிசுத்த பாதையில் ஒவ்வொரு நாளும் வளரச் செய்கிறார்.

     அவர்கள் பரிசுத்த வாழ்க்கையை கொண்டிருப்பார்கள். அவர்களில்  வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதால் அவ்விதம் செய்கை, நடத்தை, பேச்சு, அனைத்தும் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருபவையாக இருக்கும். அருமையான சகோதரனே! சகோதரியே! உன் வாழ்க்கை அப்படி இருக்கிறதா? தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை கிறிஸ்து  மூலமாய் தமக்கு சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.’ (எபேசியர் 1 : 4 -6) உங்களில் கர்த்தர் செயல்படுகிறதைக் காணமுடிகிறதா?  நீ தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரமா?  உனக்கு அனுமதிக்கப்படுகிற ஒவ்வொரு வாழ்க்கையின் சம்பவமும் உன்னைத் தம்முடைய சாயலுக்கொப்பாய் மாற்ற கர்த்தர் அனுமதிக்கிறவைகள் என்பதை அறிவாயா?