கிருபை சத்திய தின தியானம்

ஜீன் 2       ஆசீர்வாதம் பெறும் நிலம்      எபி 6 : 1 – 12

தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக்குடித்து, தன்னிடத்தில் பயிடுகிறவர்களுகேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும், முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயும்; இருக்கிறது  சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு’ (எபிரேயர் 6 : 7, 8)

                நம்முடைய வாழ்க்கையில் மெய்யான ஆசீர்வாதத்தைப் பெறும் வழியை கர்த்தர் இங்கு சொல்லுகிறார். இன்றைக்கு அநேகர் ஆசீர்வாதத்தை விரும்புகிறார்கள். நீ தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறாய், படிக்கிறாய் ஆனால் அதற்கு கீழ்ப்படியவேண்டுமென்று  எண்ணுவதில்லை. அதின் மூலமாக ஆவிக்குரிய நன்மையான காரியங்களைக்  பெறவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில்லை. ஆவிக்குரிய நற்கனிகளைக் கொடுப்பதற்கு பதிலாக நீ முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிறாய். தேவன் இதைக்குறித்து வேதனைப்படுகிறார். உன்னுடைய வாழ்க்கை உன்னையும், மற்றவர்களையும்  காயப்படுத்தும் வாழ்க்கையாகதான் இருக்கும். அவ்விதமான வாழ்க்கையில் நீ ஒருபோதும் ஆசீர்வாதம் பெறமுடியாது.

            ஆனால் தேவனுடைய வார்த்தையை நீ கேட்கும்போது, அதை உண்மையிலேயே ஏற்றுகொண்டு அதற்குக் கீழ்படியும்போது, மிகுந்த ஆசீர்வாதம் பெறுவாய், மழை பெய்யும் பொழுது அந்த தண்ணீர் ,நிலத்தில் நன்கு இரங்கி, அதை செடிகள் நன்றாய் உறிஞ்சி குடிக்கும் பொழுது, எவ்விதம் நல்ல பலனைக்கொடுக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அது மாத்திரமல்ல, அந்த செடி எவ்வளவு பசுமையாய், செழிப்பாய் காணப்படும் என்பதை அறிந்திருக்கிறோம். அது மிகுந்த கனிகளைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். அதுபோலவே நாம் ஒவ்வொரு நாளும் நம் ஆத்துமாவை வறண்டுபோகாமல் தேவனுடைய வார்த்தையினால், அதை பசுமையாய் காத்துக்கொள்ளும்போது, நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். நம்முடைய வாழ்க்கை மிகுந்த கனிகளை கொடுக்கும் வாழ்க்கையாக இருக்கும். அதினால் நாம் இயேசுவின் சீஷர்கள் என்று காணப்படுவோம். தேவனுடைய நாமம் அதினால் மகிமைப்படும்.