அக்டோபர் 22
“நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்”(யோவான் 3 : 7)
இன்றைக்கு மறுபிறப்பைக்குறித்து சபைகளில் அதிகமாய்ப் போதிப்பதில்லை. மறுப்பிறப்பு அவ்வளவு முக்கியமானதா? ஆம்! இது மிக மிக முக்கியமானது, அவசியமானது. ஏனென்றால் ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் பரலோக ராஜ்யம் செல்லமுடியாது என்று வேதம் தெளிவாய் போதிக்கிறது. அப்படியானால் இதைக்குறித்து நீ நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டியது எவ்வளவு அவசியமானது என்று எண்ணிப்பார்! நீ கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவரா? உனக்கு கிறிஸ்தவ பெயருண்டா? கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டவரா? என்பதெல்லாம் அவசியமில்லை. மறுபடியும் பிறந்தவரா என்பதுதான் அவசியம்.
மறுபிறப்பில் இரண்டு காரியங்கள் உண்டு. பிறப்பு என்று சொல்லும்போது அது முற்றிலும் புதிதாக நடைபெறும் காரியம். பழையதை செவ்வைப்படுத்துவதல்ல. இரண்டாவது நீ மறுபடியும் பிறந்திருந்தால் ஒரு புதிய மனிதனாக இருப்பாய். பழையவைகள் யாவும் ஒழிந்துப் போயின. ஆவியானவரால் பிறந்த புது சிருஷ்டியாக நீ இருப்பாய். நீ மெய்யாலும் புதிதாக பிறந்த புது சிருஷ்டியா?
நான் மறுபடியும் பிறந்த மனிதனா என்பதை எப்படி அறியமுடியும் என்று கேட்கிறாயா? இது மனிதனின் முழு ஆள்தத்துவத்தில் நடைபெறும் காரியம். இது தேவன் மனிதனில் செயல்படுத்தும் காரியம். புது ஜீவனை உனக்குள் வைத்து அதன் மூலம் ஆளப்படும் வாழ்க்கை. நிக்கொதேமு மறுபிறப்படைய வேண்டும் என்பதை இயேசுவின் மூலம் கேட்டபொழுது அதைக்குறித்து அவன் கோபப்படவில்லை. அதற்கு பதிலாக அதை அறிய வாஞ்சித்து மேலும் கேள்விகளைக் கேட்டான். பிறகு அவன் ஒரு மறுபிறப்படைந்த மனிதன் ஆனான், அருமையான சகோதரனே! சகோதரியே! நீ மெய்யாலும் மறுபிறப்படைந்திருக்கிறாயா? பேதுரு தனது நிருபத்தில் ‘ நீங்கள் மறுபடியும் ஜெநிபிக்கப்பட்டிருக்கிறீர்களே’ என்று பல தேசங்களில் சிதறியிருந்த விசுவாசிகளைப் பார்த்து நிச்சயமாய்ச் சொல்லமுடிந்தது. உங்களைப் பார்த்து அவ்விதம் நிச்சயமாய் சொல்லமுடியுமா? இல்லையேல் ஆராய்ந்து பார்த்து மனந்திரும்பு. தேவன் மறுபிறப்படையச் செய்வார்.