கிருபை சத்திய தின தியானம்

செப்டம்பர் 6              அமரிக்கையும் நம்பிக்கையும்           ஏசாயா 30:8-17

‘அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்,

நீங்களோ அப்படிசெய்ய மனதாயிராமல்; அப்படியல்ல,

குதிரைகளின் மேல் ஏறி  ஓடிப்போவோம் என்கிறீர்கள்’ (ஏசா 30:15,16)

    வாழ்க்கையில் அமரிக்கையாய் அதாவது அமைதியாய் இருப்பதில் பெரிய வெற்றி இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பத்திலும் அமைதியைச் சீர்குலைக்க அநேகக் காரியங்கள் உண்டு. ஆனால் அதன் மத்தியில்தான் அமரிக்கையோடு கூடிய நம்பிக்கை தேவை. இவை இரண்டும் இணைந்த தன்மையினால், நீ மலை போன்ற சோதனையையும் வெற்றியோடே கடந்து செல்ல முடியும். சிவந்த சமுத்திரத்தின் முன்பாக கலங்கிப் போன இஸ்ரவேல் மக்களைப் பார்த்து மோசே என்ன சொன்னார்? ‘பயப்படாதிருங்கள்’ நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்ச்சிப்பை பாருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மா இருப்பீர்கள்.’ (யாத் 14:13,14)

    மேற்சொல்லப்பட்ட  வசனத்தில்  இஸ்ரவேல் மக்கள் என்ன சொல்லுகிறார்கள். ‘அப்படியல்ல’ என்றார்கள். ஆம்! சிலர் எந்த தேவ ஆலோசனையக் கொடுத்தாலும் உடனடியாக அதை எதிர்க்கும் தன்மை உள்ளவர்களாயிருப்பார்கள். உன்னில் அவ்விதமான குணம் இருக்குமானால் நீ அதை உணர்ந்து அதைக் குறித்து துக்கப்படு. அப்பொழுது உன் ஆன்மாவிற்கு நன்மை உண்டாகும். 

    மேலும் என்ன சொல்லுகிறார்கள், ‘குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம்’. இங்கு குதிரை என்று சொல்லும்போது தேவனைத் தவிர மற்றவைகளை நம்பி செயல்படுவதைக் குறிக்கிறது. சுய பலம், பணம், மனிதர்கள் மற்றும் தேவனை விட்டு வேறு எதையாகிலும் சார்ந்துக்கொள்வது. வேதம் என்ன சொல்லுகிறது? ‘இரட்சிக்கிறதற்கு குதிரை விருதா, அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.’ ‘ஆம்! இவ்விதமான மக்களுடைய முடிவு எப்படி இருக்கும்? ‘வேகமான வாகனங்களின் மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள், அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய் துரத்துவார்கள். (ஏசாயா 30:16)