“அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு” (2தீமோத்தேயு 2:22).
நம்முடைய வாழ்க்கையில் சுத்த இருதயத்தைக் கொண்டிருக்கும்படியான ஜாக்கிரதை நம்மிடத்தில் இருக்கிறதா என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிப்பதில்லை. பரிசுத்த வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் நாம் பின்பற்றும்படியான அதி முக்கியமான காரியம். ஆனால் எத்தனை வேளைகளில் உங்களுடைய இருதயத்தில் பரிசுத்தம் இல்லாதவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் வெளியரங்கமாக பாவத்தைச் செய்யவில்லை என்றாலும் உங்கள் இருதயத்தில் பரிசுத்தம் அல்லாத காரியங்களை வைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் வேதம் சொல்லுகிறது “நான் பரிசுத்தமாய் இருப்பதைப் போல நீங்களும் பரிசுத்தமாய் இருங்கள்” என்று. தேவனுக்கு பரிசுத்தமில்லாத ஒரு மனிதன் உபயோகமுள்ளவனாக இருக்க முடியாது. நீங்கள் தேவனால் உபயோகப்படுத்தப்பட வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையில் பரிசுத்தம் தேவை. பரிசுத்தம் என்பது பாவத்தை வெறுக்கிற ஒரு வாழ்க்கை. மோசே அந்நித்தியமான பாவ சந்தோஷத்தை வெறுத்தார் என்று பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்ததை நாடுவதும் பாவத்தை வெறுப்பதுமான இரண்டு காரியங்களும் காணப்பட வேண்டும். “சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன்தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்” (ஏசாயா 6:2-3). பரிசுத்தமுள்ள தேவனைத் தொழுதுகொள்ளுகிற நாம் பரிசுத்தமில்லாமல் தேவனோடு கொண்டிருக்கும் உறவில் நிச்சயமாக சரியாக இருக்க முடியாது. நாம் மெய்யாலுமே பரிசுத்த வாழ்க்கையை வாஞ்சித்து அதைத் தேடி வாழுகிறோமா? அப்படியென்றால் நாம் பாவ சந்தோஷத்தை வெறுத்து அதை விட்டு விலகி ஓட வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்ததைக் குறித்த பயம் நம்மில் காணப்படும்பொழுது இவ்விதமாய் வாழுவோம்.