கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 4                     தூதர்களின் பாதுகாப்பு               (சங்கீதம்  34:1-10)

“கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” (சங்கீதம் 34:7)

    தேவதூதர்களை நம்முடைய கண்களால் காணமுடிவதில்லை. ஆனால் அவர்கள் இடைவிடாமல் தேவ ஜனங்களுக்கென்று பணிசெய்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய கட்டளைகளை நிறைவேற்றும்படி எப்போதும் வானத்திற்கும் பூமிக்கும் ஏறி இறங்கி செயல்படுகிறார்கள். ஒருவேளை இந்த உலகத்தில் ஒரு பெரிய அரசியல்வாதிக்கோ, ஒரு நாட்டின் தலைவனுக்கோ  உலகபிரகாரமான சில பாதுகாப்பை கொடுக்கலாம். அது பாதுகாவலர்களைக்கொண்டு எவ்வளவு விஞ்ஞான ரீதியான பாதுகாப்பாக இருந்தாலும் முழுமையான பாதுகாப்பல்ல.

     ஆனால் தேவனுக்குப் பயந்தவர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பை நாம் இங்கு பார்க்கிறோம். தேவதூதனே அவர்கள் பட்சத்தில் செயல்படுகிறான். தேவதூதனின் வலிமை சாதாரணமானதல்ல. ஒரு தேவதூதன் எசேக்கியா ராஜாவின் நாட்களில் அசீரியா ராஜாவின் சேனைகளில், ஒரே இரவில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு தேவ தூதனுக்கு இவ்வளவு வல்லமை கொடுத்திருப்பாரானால், தேவனுடைய வல்லமை எவ்வளவு பெரிதென்று யோசித்துப்பாருங்கள். இந்த தேவனுடைய சேனைக்கு முன்பாக யார் நிற்கமுடியும்?

     இவ்வித உன்னதமான பாதுகாப்பைத் தேவன் தம்முடைய மக்களுக்குக் கொடுக்கிறார். அவர்களுக்கு எப்போதும் பாதுகாவலாக இருந்து இந்த தேவதூதர்கள் செயல்படுகிறார்கள். நாம் அவர்களை காணமுடியாவிட்டாலும், அவர்கள் நமக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. தேவன் எவ்வளவு அற்புதமாக அவருடைய பிள்ளைகளை பாதுகாக்கிறார். இந்த உலக தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு எல்லா விதத்திலும் பாதுகாப்பு கொடுக்கமுடியாது. ஆனால் தேவன் சர்வ வல்லவர், அவருடைய பாதுகாப்பும் சர்வவல்லமையுள்ளது. நாம் அறியாத விதத்தில் எத்தனை முறை தேவன் தம்முடைய தூதர்களைக்கொண்டு நம்மை விடுவித்திருக்கின்றார் என்பதை முழுமையாக நாம் இந்த உலகில் அறியோம். ஆனால் நித்தியத்தில் அறிவோம். உனக்கு இந்தப் பாதுகாப்பின் நிச்சயம் உண்டா?