அக்டோபர்: 13        

“வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்” (யூதா 24)

மனிதனின் இரட்சிப்பின் ஆரம்பம் மனிதனல்ல, தேவனே என்பதை வேதம் மறுபடியும் மறுபடியுமாக போதிக்கிறது. இரட்சிப்பு மனிதனைச் சார்ந்து இருக்கிறது என்ற போதனையை நாம் வேதத்தில் பார்ப்பதில்லை. இழந்து போனதைத் தேடி இரட்சிக்க வந்தவர் நமது ஆண்டவர். இயேசு. “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களை தெரிந்துகொண்டேன்” (யோவான் 15:16) இவ்விதம் நம்மில் இரட்சிப்பை ஆரம்பம் பண்ணின தேவன் நடுவில் நம்மைவிட்டுவிடுவார் என்று எங்கும் சொல்லவில்லை. “அவர்களை முற்றும் முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபிரேயர் 7:25).

தம்முடைய பிள்ளைகளுக்காக சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலம், அவர்களை இரட்சித்து தொடர்ந்து பாதுகாக்கிறார். ஆகவே யூதா இவ்விதம் நிச்சயமாக எழுதமுடிகிறது. “வழுவாதபடி உங்களைக் காக்க வல்லவர்.” இரட்சிப்பை நாம்,  நாமாவே காத்துக்கொள்ளமுடியாது. அதை நமக்காக காக்கிறவர் தேவனே. ஆகவே தான், நாம் தினமும் தேவனை நோக்கிப் பார்க்கிறோம், பார்க்கவேண்டும். நாம் வழுவிப்போகிறவர்கள், ஆனால் நம்மை அழைத்த தேவன் நம்மை வழுவாமல் காத்துக்கொள்ள வல்லமையுள்ளவர்.

நம்மை இப்பொழுது காப்பது மாத்திரமல்ல, கடைசிமட்டும் அவர் காக்கிறவர். “தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்  . தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தி அவர்களை மீட்டுக்கொண்டவர், அதின் பலனைக் கண்டு மகிழாமல் எப்படி இருக்கமுடியும்? அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனை கண்டு திருப்தியாவார். என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார். அவர்களுடைய அக்கிரமங்களைதாமே சுமந்து கொள்வார்” (ஏசாயா 53:11 ) முடிவில் தம்முடைய மக்களை மகிமையுள்ள சந்நிதானத்திலே நிறுத்துவார்.