டிசம்பர் 10
“யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்”( யோபு 42:10).
யோபு தனக்காக ஜெபிக்க வேண்டியதின் அவசியம் மிகப்பெரியதாக இருந்தது. அவருடைய பாடுகள், இழப்புகள், கஷ்டங்கள் மத்தியில் அவர் மற்றவர்களுக்காக ஜெபிக்க முடியும் என்ற நிலையே காணப்படவில்லை. ஆனால் வேதம் சொல்லுகிறது யோபு தான் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். ஒருவேளை தன் சிறையிருப்பை மாற்றுவார் என்று தன் சிநேகிதருக்காக ஜெபித்தாரா? இல்லை அவர் தன்னுடைய இக்கட்டான சூழலிலும் தன்னுடைய சிநேகிதருக்காக ஜெபிப்பதை தெரிந்து கொண்டது, அவருடைய மன்னிக்கும் தன்மையையும், தன்னுடைய நண்பர்கள் மீதுள்ள அன்பையும் காட்டுகிறதாக இருக்கிறது.
நம்முடைய வாழ்க்கையிலும் மற்றவர்களுக்காக அதிகமாக ஜெபிக்க வேண்டும். எப்பொழுதும் நம்முடைய கஷ்டங்கள், பாடுகள் பெரிதாக எண்ணி செயல்படும் பொழுது, அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பிரச்சினைகள் மறைவது கிடையாது. ஒருவேளை கர்த்தர் அவ்விதமான சூழ்நிலையிலும் நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பதை எதிர்பார்க்கக் கூடும் என்பதை நினைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் யோபுவின் வாழ்க்கையில் அவன் அவ்விதமாக தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபொழுது, முன்பு இருந்ததைப் பார்க்கிலும் இரட்டைத் தனையாய் தந்து ஆசீர்வதிப்பதை நாம் பார்க்கிறோம்.
இன்னுமாக சங்கீதம் 14:7 ஆம் வசனத்தில் “சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்”என்று வேதம் சொல்லுவதைப் பார்க்கிறோம். அருமையானவர்களே நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்பொழுது கர்த்தர் தம்முடைய சிறையிருப்பை திருப்புவது மாத்திரமல்ல, கர்த்தரின் மகிழ்ச்சியும் நிச்சயமாக அங்கு காணப்படும் என்பதில் சந்தேமில்லை. நீ மற்றவர்களுக்காக ஜெபிக்கும்பொழுது கர்த்தர் உனக்காக ஜெபிக்கிற மக்களை நிச்சயமாக எழுப்புவார்.