“மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்” (யோபு 33:17).

பொதுவாக மனிதன் தான் நினைத்ததைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துச் செய்கிறவனாய் இருக்கிறான். அவன் நினைத்தது ஒன்றும் தடைபடாது என்றும் நினைக்கிறான். பாபேல் கோபுரம் அவ்விதமாக மனிதனுடைய மேன்மைக்காக வெளிப்படுத்தும்படியாக அதைக் கட்ட நினைத்ததைப் பார்க்கிறோம். அவன் செய்ய நினைத்தது தடைபடாது என்று எண்ணினான். ஆனால் கர்த்தர் அவனுக்கு அந்தக் காரியம் வாய்க்காமல் போகும்படிச் செய்கிறார். அருமையானவர்களே! உங்களுடைய வாழ்க்கையில் அநேகக் காரியங்களைக் கர்த்தர் ஏன் தடைசெய்கிறார் என்றால், நீங்கள் செய்யும்படியானக் காரியங்கள் உங்களுடையப் பெருமைக்காக புகழ்ச்சிக்காக செய்கின்றீர்கள். அதை ஆண்டவருடைய நாமத்தின் மகிமைக்கென்று நீங்கள் செய்யவில்லை. மேலும் வேதத்தில் பார்க்கும்பொழுது மனுஷனுடைய பெருமை அடங்கவும் செய்கிறார் என்று பார்க்கிறோம். ஆண்டவர் ஏன் உங்களுடைய வாழ்க்கையில் செய்கிறார் என்றால், உங்களுடையப் பெருமையை ஆண்டவர் அடக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஒருவிதத்தில் இது உங்களுக்கு நன்மையானது தான். உங்களுடைய பெருமையினால் நீங்கள் அழிந்து போகாதபடிக்கு, அதை நீங்கள் உணர்ந்துக்கொண்டு தேவன் பக்கமாகத் திரும்பும்படி கிருபையின் காரியத்தைத் தேவன் செய்யும்படியாக விரும்புகிறார். ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் நேரிடுகிற எல்லாக் காரியத்திலும் அவருடைய ஆளுகை உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம். அவருடைய சித்தத்திற்கும் வழிநடத்துதலுக்கும் உங்களை முழுமையாய் ஒப்புக்கொடுங்கள். அது உங்களுக்கு மேன்மையானதாய் இருக்கும். ஆண்டவர் உங்களுடைய வாழ்க்கையில் செய்வது உங்கள் நன்மைக்கேதுவனது என்று உணர்ந்து அவருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துவீர்கள் என்றால், கர்த்தர் உங்களுக்கு மேலான காரியங்களை வைத்திருக்கின்றார். ஆகவே அவருக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது அவர் நிச்சயமாக உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவார்.