கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 24                   உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்         எரேமியா 15 :10-20

“உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்;

அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்,

ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்;

உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும்

நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா  15:20)

   தேவன் எரேமியாவை மிகவும் கடினமான ஊழியத்திற்கென்று அழைத்தார். தேவனுடைய வார்த்தைக்கு இணங்கிக்கொடுக்காத  ஜனங்கள் மத்தியில் செய்யும் பணிக்கு அவரை அழைத்தார். தேவன் யாரை அழைக்கிறாரோ அவர்களுக்கு அந்தப் பணிக்கேற்ற வாக்குத்தத்தத்தையும் கொடுக்கிறார். தேவனை அறிந்த மக்களும் இந்த உலகில் கர்த்தருக்கென்று நிறைவேற்றவேண்டிய பணி உண்டு. நீ இருக்கும் இடத்தில், வேலை செய்யும் ஸ்தலத்தில் தேவனுக்கென்று சாட்சியாக நிற்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறாய். உன்னைச் சுற்றிலும் தேவனை அறியாத ஜனங்கள் மத்தியில், நீ தேவனுக்கென்று சாட்சிபகருவது அதிகக் கடினமானதாக இருக்கலாம். நீ தேவனைக் குறித்து எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அதை அவர்கள் அலட்சியப்படுத்துகிறதாகக் காணப்பட்டாலும், தேவன் உன்னை அவைகளின் மத்தியில் உறுதியாய் நிற்கும் அரணான வெண்கல அலங்கமாக்குவேன் என்று சொல்லுகிறார்.

    உண்மையான சத்தியத்திற்கு சாட்சிபகரும்படி நீ அழைக்கப்பட்டிருக்கிறாய். மெய்யான சத்தியத்தை விரும்பாத நாட்களில் நாம் வாழுகிறோம். ஒருவேளை அதை அநேகர் எதிர்த்து நிற்கலாம். ஆனாலும் நீ சத்தியத்தை உறுதியாய் அறிவிக்க தேவன் உன்னைப் பெலப்படுத்துவர். நீ அவர்களுக்கு முன்பாக சத்தியத்தை உணர்த்துவிக்கத்தக்கதாக பெலப்படுத்துவார். நீ உன்னுடைய பெலத்தினால் அவைகளைச் செய்யமுடியாது. நீ அப்படி செய்வாயானால் தோற்றுவிடுவாய். உனக்கு தேவன் என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார் தெரியுமா? ‘உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னை தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன்’ என்று சொல்லுகிறார். அவ்விதம் தைரியமாயிருந்து தேவனுக்கென்று நீ நிற்கிறாயா?